என் மலர்tooltip icon

    உலகம்

    அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பு? - ஆய்வில் அதிர்ச்சி
    X

    அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பு? - ஆய்வில் அதிர்ச்சி

    • இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றம் அரிசியில் அதிக அளவு ஆர்சனிக் ஏற்பட வழிவகுக்கும், இது 2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு வாழ்நாள் புற்றுநோய் மற்றும் உடல்நல அபாயங்களை அதிகரிக்கும் என்று தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிப்பதும், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதும் மண் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆர்சனிக்கிற்கு சாதகமாக மாறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

    இந்த ஆர்சனிக், அரிசி தானியத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. நெல் சாகுபடியின் போது மாசுபட்ட மண் மற்றும் பாசன நீர் ஆகியவை அரிசியில் கனிம ஆர்சனிக் அளவை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்து கூடுதல் ஆர்சனிக்கையும் அரிசி உறிஞ்சிவிடும்.

    ஆர்சனிக்கின் அதிகரித்த வெளிப்பாடு நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது.

    இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவாக உள்ளதால், இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் வயலில் 10 ஆண்டுகளில் 28 அரிசி வகைகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் விளைவுகளை அளந்தனர்.

    மாதிரிகளைப் பயன்படுத்தி, பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு ஆசிய நாடுகளுக்கான கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் சுகாதார அபாயங்கள் மதிப்பிடப்பட்டன.

    இந்த ஆய்வின் முடிவில், அரிசியில் ஆர்சனிக் செறிவுகளை அதிகரிக்க வெப்பநிலை மற்றும் CO2 ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதையும், அரிசி நுகர்வோருக்கு உணவு ஆர்சனிக் வெளிப்பாடுகளை அதிகரிப்பதையும், 2050 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளின் மக்கள்தொகையில் கோடிக்கணக்கானோருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதையும் கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    ஆய்வு செய்யப்பட்ட ஏழு நாடுகளில், 2050 ஆம் ஆண்டில் அரிசியில் உள்ள ஆர்சனிக் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×