என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.
- காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்கிறது.
* 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
* 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.
* உணவுப்பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது 45 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
* உணவு பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்து சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்தது.
* காசா மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
* காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
* காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
* 14-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.
* மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிறநாட்டு விவகாரம் என்று பார்க்கக்கூடாது.
* காசாவை மறுகட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை:
காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஐ.யு.எம்.எல். பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் நித்யானந்தன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
- கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
- முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை செந்தில் பாலாஜி வழங்கினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை அவர் வழங்கினார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.
- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
- ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல், இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "எனக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" என கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில், டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
- ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.
- விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்:-
அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களை தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.
- கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.
- பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்.
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றார்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார்.
மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றனர்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.
சென்னை:
பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
- சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டு தேதி தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
- நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
அப்போது, இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.






