என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
- இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மகனை தாய் கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் ஆதிராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரசாத்தை (35). துப்புரவு பணியாளராக இவர் பணி செய்து வந்தார். இவரின் தாயார் லட்சுமி தேவி (57). ஐதராபாத்,நரசராவ்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனது அத்தைகள், சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
ஐதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது அத்தைகள் இருவரை பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தனது மகனை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் பிரசாத் உயிரிழந்தார். உறவினர்களின் உதவியுடன் மகனின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார்.

இதுதொடர்பாக தற்போது தகவலறிந்த போலீசார் பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயில் இருந்து மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஐபிசி சட்டம் 103 மற்றும் 238 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
- தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
திருப்பூர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.
மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.
மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.
கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.
- இந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
- இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தமிழில் இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படமான "தேரே இஸ்க் மேன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகர் தனுஷ் கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரவனில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் கேமராவை நோக்கி கையசைக்கிறார்.
இதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒருத்தரை துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனந்த் எல் ராய் தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷால் சின்கா மேற்கொள்ள, ஆக்ஷன் இயக்குநராக ஷாம் கௌஷால் பணியாற்றுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
- ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.
நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை;
- ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை; இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப் போன்ற தோற்றத்தை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன.
ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதேபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது. இனி வரும் காலங்களிலும் இத்தகையப் போக்கு தொடர்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்.'
- இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியீட்டை ஒட்டி படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.
தற்போது டீசல் படத்தின் இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
- தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை அரசு, அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்தும், அதனை கட்டத்தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.
பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., மீனவர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
- கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார்.
தோகா:
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவர் 17, 18-ந்தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் எங்கள் வளர்ந்து வரும் பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
கத்தார் மன்னருக்கு 18-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
- சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?
- இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.
'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.
எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
- கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
- 'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் குறித்து விசாரணை நடந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இரங்கல் செய்தி வெளியிட்டார். முதலில் அந்த செய்தியில் 'கூட்டநெரிசல்' என்று சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதை நீக்கி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மட்டும் மறுபதிவு செய்துள்ளார்.
அவரது திருத்தப்பட்ட எக்ஸ் பதிவில்,
'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையரிடம் பேசி நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரணப் பணியாளர்களை அனுப்புமாறு தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.
மீட்புப் படையினர் மற்றும் காவல் ஆணையர் சம்பவ இடத்தில் இருக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நான் தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல் வரியில், 'புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் குழப்பம் காரணமாகப் பல உயிர்கள் பறிபோன "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது என்று எழுதியிருந்தார்.

- திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
சென்னை:
நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பாகவே மத்திய அரசை சாடி சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த திவ்யாவை, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
- இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் மம்மூட்டி இணைந்து நடித்த 'பசூகா' படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் மம்மூட்டியின் அடித்த பட அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி தயாரிக்கிறது.
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






