என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
- தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை அரசு, அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்தும், அதனை கட்டத்தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.
பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., மீனவர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
- கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார்.
தோகா:
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவர் 17, 18-ந்தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் எங்கள் வளர்ந்து வரும் பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
கத்தார் மன்னருக்கு 18-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
- சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?
- இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.
'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குக்குழி பழனிசாமிக்கு?
இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.
எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
- கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
- 'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் குறித்து விசாரணை நடந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இரங்கல் செய்தி வெளியிட்டார். முதலில் அந்த செய்தியில் 'கூட்டநெரிசல்' என்று சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதை நீக்கி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மட்டும் மறுபதிவு செய்துள்ளார்.
அவரது திருத்தப்பட்ட எக்ஸ் பதிவில்,
'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையரிடம் பேசி நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரணப் பணியாளர்களை அனுப்புமாறு தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.
மீட்புப் படையினர் மற்றும் காவல் ஆணையர் சம்பவ இடத்தில் இருக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நான் தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல் வரியில், 'புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் குழப்பம் காரணமாகப் பல உயிர்கள் பறிபோன "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது என்று எழுதியிருந்தார்.

- திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
சென்னை:
நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பாகவே மத்திய அரசை சாடி சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த திவ்யாவை, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
- இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் மம்மூட்டி இணைந்து நடித்த 'பசூகா' படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் மம்மூட்டியின் அடித்த பட அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி தயாரிக்கிறது.
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- யோகி பாபு தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் யோகி பாபு. இவர் காமெடியன், கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென இடத்தை உருவாக்கிக்கொண்டவர். யோகி பாபு தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது பிரபலமான ஆன்மிக தலங்களுக்கும் செல்வார்.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு பயணம் செய்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, நான் சாலை விபத்தில் சிக்கவில்லை நலமுடன் இருக்கிறேன் என்று யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
- நாம் சூப்பர்ஸ்டார்கள் அல்ல, விளையாட்டு வீரர்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது முதல் ரவிச்சந்திரன் அஷ்வின் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், யூடியூப் தளத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதன் பிறகு, அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் அஷ்வின் சமீபத்தில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிராக பேசியிருந்தார். அப்போது, வீரர்கள் மக்களுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள நிதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் இந்தி மொழி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது முக்கியம். இந்திய கிரிக்கெட் அணிக்குள் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது. எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நாம் இயல்பாக்க வேண்டும். நாம் கிரிக்கெட் வீரர்கள்."
"நாம் நடிகர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், மேலும் பொது மக்கள் எதிரொலிக்க வேண்டிய, தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.
- பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
- உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என வினவியுள்ளார்.
- கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல!
- முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






