என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
- ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் மகா சிவராத்திரி விழாவுக்கான அலங்கார பணிகளை மேற்கொள்வதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இச்சாக் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மற்றொரு சமூகத்தினர் அதை எதிர்த்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது கலவரமாக மாறி கடைகளுக்கு தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், டெம்போ மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.
தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஐபிஎஸ் ஸ்ருதி அகர்வால் தெரிவித்தார். மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
- ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
- பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை போலீசார் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
இதனை பார்த்த கபில் குமார், சந்தோஷ் யாதவ் ஆகிய 2 போலீசார் உடனடியாக பயணியை மீட்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
- பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு.
- எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுடைய கொள்கை நம்முடைய மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற கொள்கை அதற்கேற்ப நடவடிக்கைகள் தென் மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடந்த 30, 40 ஆண்டு காலமாக அந்த டோட்டல் ஃபெர்ட்டிலிட்டி ரேட்(டிஎப்ஆர்) இந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் டிஆர்எப் குறைந்துள்ளது. இதுவே நமக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
இதுதொடர்பாக முதலமைச்சர் வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருக்கின்றார். அதில் பாமக சார்பில் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவிக்கும்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால்தான் நாங்கள் கல்வி துறையிலேயே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவோம் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.
குறிப்பாக கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசின் உரிமை.
நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாங்கள் நிதி கொடுக்க மாட்டோம் என்பது தவறான உதாரணம். அதை வலியுறுத்த கூடாது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைகள் கடந்த 60 ஆண்டு காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இது தொடர வேண்டும்.
எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. எல்லாம் மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த மொழியை கற்று தான் ஆக வேண்டும் என்று சொல்வது தவறு.
தமிழ்நாட்டிற்கென கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையை மாற்ற சொல்வது மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2004-2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது தமிழகத்திற்கு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
* கோவை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
* உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்ற வர்த்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.
* பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார்.
* 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியோடுதான் தொடங்க போகிறது.
* தமிழ்நாட்டில் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.
* 2026-ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி உருவாவது உறுதி.... உறுதி...
* வகுப்புவாதம், பிரிவினை வாதம் சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
* பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனித்துவமான முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.
* தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களில் மொழி வளம், கலாசாரம் உள்ளிட்டவைகளை போற்றக் கூடிய மபெரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.
* வேங்கைவயலில் ஒரு சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது.
* கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. கள்ளக்சாரயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என புகார் அளிக்கும் கல்லூரி மாணவர்கள் திடீரென கொள்ளப்படுகிறார்கள்.
* இப்போது தேச விரோத சிந்தனை மட்டும்தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது.
* கனிம வளக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் உதவியுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.
* ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தலைவர் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் பணமோசடி வழக்கு மற்றும் செம்மணல் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.
* யார் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடித்தான் திமுக உறுப்பினர்களாக சேர்க்கும்போல் இருக்கிறது.
* ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரம் அடைந்திருக்கிறது. துன்பத்தில் இருக்கிறது. இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது புதல்வர் புதுபுது பிரச்சனையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
* தற்போது நீங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஒரு புதிய பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பாராளுமன்ற இடங்கள் குறையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார். இந்த விசயத்தில் பொய் சொல்லி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். இழப்பு ஏற்படும் எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது. நான் உண்மையை உரைத்திருக்கிறேன். எனக்கு பதில் சொல்ல் கடமைப்பட்டுள்ளீர்கள்.
* 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியமாக 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.
* கட்டுமான பணிகளுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே, மத்திய அரசு நிதி தரவில்லை என மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு உண்மையான துரோகம் செய்துள்ளீர்கள். மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?
- தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்.
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர். தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?" என்று இங்கேயுள்ள பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாகத் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்.
நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றனர்.
சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகள் நடத்தப்பட்டன.
துறையூரில் 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான அறிஞர் அண்ணா அவர்கள், இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய அன்றைய இராஜாஜி அரசின் செயலை வரவேற்றதுடன், மேல்நிலை வகுப்புகளில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் தலையங்கங்கள் எழுதப்பட்டன.
காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அவர்கள். "வருணாசிரம தர்மம் காப்பாற்றப்படவும், கிராம ராஜ்ஜியம் ஏற்படவும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்" என்று கூறினார். இவற்றையெல்லாம் எதிர்த்துதான் பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர் தமிழர்கள்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.
உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், கழக மாணவரணியின் முன்னெடுப்பில், ஆர்ப்பாட்டம் நடத்திய செய்திகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது.
ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணி என்பது. சென்னை சௌகார்பேட்டை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் 1938-ஆம் ஆண்டு ஆண்களும் பெண்களுமாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இன்றைய பதிப்பு போல இருந்தது.
அப்போது நடந்த போராட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகிய 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீத்தம்மாள் தனது மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒரு வயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் கைதாகி சிறை சென்றார் என்பது திராவிட இயக்கத்தின் தியாக வரலாறு.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம். சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
- ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி விபத்துள்ளது.
- நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.
சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.
ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீடு உள்ள பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.
- அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும்.
- புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என்பதை அவரே வெளிகாட்டிக் கொள்கிறார். 1938ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே இந்தி மொழி திணிக்கப்பட்டது.
அன்றைக்கே தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிடக் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து போராட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை பரப்பினார்கள். இதெல்லாம் அவருக்கு தெரியாது.
1952ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்று கூறியபோது அதையும் எதிர்த்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
1957ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட நேரத்தில் ஈவிகே சம்பத் அவர்கள் நேருவிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பேசினார். அப்போது நேரு உத்தரவாதமாக இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று ஒரு உத்தரவாதம் அளித்தார்.
அனுபவமின்னை. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும். அது அவருடைய அறியாமை.
திமுக என்ன செய்திருக்கிறது. திராவிடக் கழகம் தமிழை காப்பாற்ற என்ன செய்திருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தி இருக்கிறது ? எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருக்கிறது ?என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது.
புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள். அவர்கள் மீது குறை சொல்வார்கள்.
அந்த குறையில் எதுவும் நியாயம் இருக்கிறதா ? என்று அவர்களுக்கு சிந்தித்து பார்ப்பதற்கு கூட தெரியாது. இந்தி மொழி பிரச்சினையிலும் அப்படிதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 04-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24- 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 -34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி?
- மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய விஜய் ஒரு வார்த்தைக்கு கூட 'இந்தி' என்ற வார்த்தையைக் உச்சரிக்காமல் பேசி முடித்தார்.
த.வெ.க. விழாவில் பேசிய விஜய், "மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர். கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர். நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.
என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்
What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார். மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?
மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro? எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம்" என்று தெரிவித்தார்.
- முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
- மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
கோவை:
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
* தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது எப்படி நடக்கம் என அமித்ஷா தெளிவாக விளக்கி உள்ளார்.
* விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* ஏற்கனவே பிரதமரும் விளக்கமாக பேசி உள்ளனர்.
* தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
* விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை, விஜய் குழந்தைகளுக்கு மும்மொழி.
* த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா? விஜய் மேடையில் பொய் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
- இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தின் பதறடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் பகுதியில் தாலுகாவில் உள்ள கட்டிஹோசஹள்ளி சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
5 பேருடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு கார், நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து 4 முறை சுழன்றது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் முகமது யூனிஸ் (20) உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

- இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இந்தப் படம் வருகிற மார்ச் 7-ம் தேதி ரிலீசாகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






