என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது.

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை "வர்த்தக போர்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    அதிபர் டிரம்ப்-இன் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரூடோ இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் கனடா மீது கடுமையாக வரி விதித்துவிட்டு, கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

    "இன்று கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. அதன் நெருங்கிய கூட்டாளி மற்றும் நண்பர்" என்று ட்ரூடோ கூறினார்.

    அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா 155 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு உடனடியாக 25% வரிவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தும். இதில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு 21 நாட்களில் வரிகளை விதிக்கும்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, அமெரிக்காவின் "சட்டவிரோத நடவடிக்கைகள்" அல்லது வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கான திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தார்.

    அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ட்ரூடோ, வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்ட கனேடியர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வேலை இழப்பவர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் வணிகங்கள் நிலையாக இருக்க உதவிகள் வழங்கப்படும். பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் "இடைவிடாமல் போராடும்" என்று ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.
    • அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

    இதனை தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வர உள்ளார்.
    • ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
    • மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.

    சென்னை:

    தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    * இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல, அது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம்.

    * இந்தி மொழி மட்டுமே இந்திய நாட்டின் தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு.

    * சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி.

    * மத்தியில் ஆள்பவர்கள் தமிழ் பகைவர்களாக உள்ளனர்.

    * தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளதாக கூறும் பிரதமர் மோடி சமஸ்கிருதத்திற்கு ரூ.2,435 கோடி ஒதுக்கியுள்ளார்.

    * 2014-2023 வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.167 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    * நிதி ஒதுக்கீட்டில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டும்.

    * இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.

    * இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி, அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக உள்ளது.

    * மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.

    * தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் நிதி தராமல் ஆதிக்க மொழிகளை கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு அழிக்க துடிக்கிறது.

    * தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசுவோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்றார். 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
    • அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு.

    இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.

    அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

    சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

    • இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-21 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி மாலை 5.47 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பரணி காலை 7.10 மணி வரை பிறகு கார்த்திகை மறுநாள் விடியற்காலை 4.54 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம், கோவை ஸ்ரீ கோணியம்மன் ரதோற்சவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-பயணம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- நன்மை

    மகரம்-ஓய்வு

    கும்பம்-சலனம்

    மீனம்-குழப்பம்

    • 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முதல் சராய் பகுதியில் 3 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வினாத்தாள் நகல்களுடன் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 9 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது.

    பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர்.

    இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    • வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.
    • 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது.

    உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
    • தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவின.

    இதனால் அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.

    இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் அதனை சுற்றியுள்ள 175 இடங்களில் தீ பரவியது.

    இதில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
    • வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.

     

    இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் அபார வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், திறமை மற்றும் மனவுறுதியுடனான மிக சிறந்த ஆட்டம். முழக்கத்துடன் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.

    நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள். இறுதி போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

    இதேபோன்று மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், பாராட்டத்தக்க வெற்றியை பெற்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.

    இந்திய அணி மீண்டும் ஒரு முறை தனித்துவம் வாய்ந்த குழுப்பணி, மனவுறுதி மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    • கல்பனாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார்.

    தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்பனா பங்கேற்றுள்ளார்.

    இந்நிலையில், பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார்.

    அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா.
    • ரசிகர்கள் நயன் தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைப்பர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த ஆவண திரைப்படத்தில் தனுஷ்-க்கும் நயன் தாராவிற்கும் இடையே சில சர்ச்சைகள் ஏற்பட்டது. ரசிகர்கள் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைப்பர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் டைட்டில் கார்டுகளிலும் இந்த பெயர் இடம் பெற்று இருக்கும்.

    ஆனால் தற்பொழுது நயன் தாரா இனிமேல் என்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பான வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது " வணக்கம்.

    இந்தக் குறிப்பு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சிறந்த ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணும் என்று நான் மனதார நம்புகிறேன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்து வருகிறது, அது எப்போதும் உங்கள் நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது வெற்றியின் போது என் தோளில் தட்டினாலும் சரி, அல்லது கஷ்டங்களின் போது என்னைத் தூக்கி நிறுத்த உங்கள் கையை நீட்டியாலும் சரி, நீங்கள் எப்போதும் எனக்காக இருந்திருக்கிறீர்கள்.

    உங்களில் பலர் என்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள், இது உங்கள் மகத்தான பாசத்திலிருந்து பிறந்த ஒரு பட்டம். இவ்வளவு மதிப்புமிக்க பட்டத்தால் எனக்கு முடிசூட்டியதற்காக நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும், நீங்கள் அனைவரும் என்னை "நயன்தாரா" என்று அழைக்க வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அந்தப் பெயர் என் இதயத்திற்கு மிக நெருக்கமானது என்று நான் உணர்கிறேன். அது ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் நான் யார் என்பதைக் குறிக்கிறது.

    பட்டங்களும் பாராட்டுகளும் விலைமதிப்பற்றவை, ஆனால் அவை சில நேரங்களில் நம் படைப்புகள், மற்றும் பார்வையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நிபந்தனையற்ற பிணைப்பிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடும்.

    நாம் அனைவரும் அன்பின் மொழியைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன், அது நம்மை எல்லா வரம்புகளையும் தாண்டி இணைக்கிறது. எதிர்காலம் நம் அனைவருக்கும் கணிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் உங்கள் மங்காத ஆதரவும், உங்களை மகிழ்விக்க நான் எடுக்கும் கடின உழைப்பும் நிலையாக இருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    சினிமாதான் நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது, அதை ஒன்றாகக் கொண்டாடுவோம். என்றும் அன்புடன், நன்றியுடன் நயன்தாரா" என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×