என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
- தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சனையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். 3-வதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியை தந்தார். ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தற்போது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர், அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது? என்று பார்க்க வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்று தான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை தி.மு.க. அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலை தான் தற்பொழுது உள்ளது. குழந்தைகளின் கல்வியில் விளையாடக் கூடாது.
மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். வேறு திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவரிடம் கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒரு அமைச்சர் இப்படி கூறக்கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
துணை முதலமைச்சர் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு அதிக இடத்தை முதல்வர் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் புகைப்படங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதலமைச்சர் புகைப்படங்களும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் 2 படங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் மோடியின் படம் தான் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும். மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. கொடுப்பவர் படம் இல்லை. விநியோகம் செய்பவரின் படம் மட்டும் ரேஷன் கடைகளில் உள்ளது. தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக்கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?
* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.
* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.
* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?
* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.
* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?
* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.
- ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் தொடங்குகிறது.
- ஐ.பி.எல். தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும் ரபோது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்.
- அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து 20-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்
சென்னை:
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரியில், தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.
ஆனால், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூறி 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ள நிலையில், அரசு தேவையில்லாமல் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
இந்த தொகையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எதிர்மனுதாரர் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கும், மீதத்தொகையை சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் 15 நாட்களில் செலுத்த வேண்டும்.
தனி தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்.
அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து வருகிற 20-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
- சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூஆர் குறியீடுகளை வழங்கினார். ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் பொதுமக்கள் காவல்துறையை எளிதாக அணுக இந்த க்யூஆர் குறியீடு உதவி புரியும்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல்துறை எஸ்ஓஎஸ் செயலியில் தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து அருகே உள்ள ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநர் உள்ளிட்ட தகவல்களை எளிதில் காவல்துறையினர் அறிய இந்த க்யூஆர் குறியீடு உதவிகரமாக அமையும்.
சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
க்யூஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ரோந்தின்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
- 5 மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். மேலும் 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வெயில் கொளுத்தும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூடத்துடன் இருக்கும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதனிடையே, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
- முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்.
உலகிலேயே முகத்தில் அதிக முடி கொண்டவராக இந்தியாவை சேர்ந்த 18 வயது இளைஞர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். லலித் படிதார் என்ற இளைஞர் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார்.
ஹைப்பர் டிரிகோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக லலித் படிதார் முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது. கின்னஸ் உலக சாதனை தரவுகளின் படி, உலகளவில் பதிவான சுமார் 50 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
முகம் முழுக்க அதிக முடி கொண்ட படிதார் தனது ஆரம்ப பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார். அப்போது, "முதலில் சில நாட்கள் நன்றாக இல்லை. எனது வகுப்பை சேர்ந்த சக தோழர்கள் என் தோற்றத்தைக் கண்டு பயந்தனர். காலப்போக்கில், அவர்கள் அவரது முகத்தில் உள்ள முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்," என்று கூறினார்.
"அவர்கள் என்னை பற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது, என்னுடன் பேசிய பிறகு, நான் அவர்களை விட வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வெளிப்புற தோற்றத்தில் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன், ஆனால் நான் உள்ளே எந்த வித்தியாசமும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
சிலர் தன்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை தான் என்று படிதர் கூறினார். பெரும்பாலானவர்கள் தன்னிடம் கருணை காட்டுகிறார்கள். ஆனால் அது நபருக்கு நபர் வேறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் வழிமுறைப்படி விஜய்யும் இன்று ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார்.
- சமி விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது சமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஷமா முகமது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும்போது, நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. முகமது சமி பயணம் செய்கிறார், அவர் தனது சொந்த இடத்தில் இல்லை. நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நோன்பு இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். அது (இஸ்லாம்) மிகவும் அறிவியல் பூர்வமான மதம் என்று ஷமா முகமது கூறினார்.
இதனையடுத்து, முகமது சமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை.
என்று தெரிவித்தார்.
மேலும் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என சமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- வாடிவாசல் திரைப்படத்தை தானு தயாரிக்கிறார்.
- வாடிவாசல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும் போது, படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாடிவாசல் பாடல் இசையமைக்கும் பணிகள் தொடங்கின என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவை டேக் செய்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆபத்து நேரிட்டால் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
- சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல் துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி கியூ.ஆர். குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கியூ.ஆர்.குறியீடுகளை வழங்கினார்.
சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட் டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88,859 தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூ.ஆர். குறியீட்டை உருவாக்கியுள்ளது.
இந்த கியூ.ஆர்.குறியீடு ஆட்டோ வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், எஸ்.ஒ.எஸ். பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும், இது ஆட்டோவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதி செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இப்புதிய கியூ.ஆர்.குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிய வருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின் போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூ.ஆர். குறியீடு உறுதி செய்கிறது. இதன் மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
- ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.
திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.
ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.
குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.
ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.






