என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
- பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.
ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.

இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.
ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.
ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார்.
- விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
- விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .
`நான்,' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.
இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்கவுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் முதல் படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதில் விஜய் ஆண்டனி பண கட்டுகள் அடுக்கப்பட்ட குவியலின் மேல் உட்கார்ந்துள்ளார். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது அடிக்கடி பறக்கக்கூடிய நேரம். பிரதமர் மோடி தற்போது மொரீசியஸ் தீவில் உள்ளார்.
- பிரதமர் வருகைக்காக மணிப்பூர் மக்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் வன்முறை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங்கிற்கு எதிராக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பைரன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே வன்முறை நிகழ்ந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. தற்போது மொரீசியஸ் தீவுக்கு சென்றுள்ளார். மொரீசியஸ் தீவின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன்பின் இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி மொரீசியஸ் சென்றுள்ள நிலையில், இது அடிக்கடி விமானத்தில் பறக்கக்கூடிய நேரம். மணிப்பூர் பிரதமர் மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
இது அடிக்கடி பறக்கக்கூடிய நேரம். பிரதமர் மோடி தற்போது மொரீசியஸ் தீவில் உள்ளார். ஆனால், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும், நிலைமை அங்கு பதற்றமாகவே உள்ளது.
பிரதமர் வருகைக்காக மணிப்பூர் மக்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடமாக மணிப்பூர் சென்று அவர் மறுப்பது, உண்மையிலேயே மணிப்பூர்மக்களை இழிவுப்படுத்துவதாகும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டிற்கு 2018 -19 முதல் 2023-24 வரை ரூ. 10,447 கோடியே 30 லட்சத்தை மோடி அரசு வழங்கியுள்ளது.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை மோடி அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்திற்கும் மோடி அரசு நிதி வழங்குகிறது.
ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அத்திட்டத்தை செயல்படுத்தினாய் மட்டுமே வழங்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். ஆனால் புதிய கல்விக் கொள்கையை மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வித்துறையில், தமிழகத்திற்கான நிதியை வழங்க முடியும் என்று மத்திய அரசு பிளாக்மெயில் செய்கிறது. மிரட்டுகிறது என்றெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள், ஆசிரியர்களின் திறன், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தவும் அதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கவும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தை (SSA) பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாட்டிற்கு 2018 -19 முதல் 2023-24 வரை ரூ. 10,447 கோடியே 30 லட்சத்தை மோடி அரசு வழங்கியுள்ளது.
எஸ்.எஸ்.ஏ.வின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ. என்ற திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பல்வேறு கட்டமைப்பு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி அவற்றை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்டு, கையெழுத்திட தயாரான தி.மு.க. அரசு, கடைசி நேரத்தில் யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு கையெழுத்திட மறுத்து விட்டது. அதனால்தான், அத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அரசியலாக்கி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறையில் பி.எம். போஷன் திட்டத்தின்கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டிற்கு 2014 -15 முதல் 2024 25 வரை ரூ. 4727 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004-25ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ரூ. 443 கோடியில் இதுவரை ரூ.339 கோடியே 17 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி படிப்பை தவறவிட்ட வயது வந்தோர்களுக்கு கல்வி அளிக்கும் 'உல்லாஸ்' என்ற புதிய பாரத கல்வியறிவு இட்டத்திற்காக 2022 23 முதல் 2024-25 வரை ரூ. 13 கோடியே 77 வட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கு திட்டத்திற்கும், அதில் பணியாற்றும் சமையலர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது. பி.எம். ஸ்ரீ. திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கான நிதி விடுவிக்கப்படாததற்கு, தி.மு.க. அரசு முதலில் ஒப்புக்கொண்டு கடைசி நேரத்தில் பின்வாங்கியதே காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளைத்தான். பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப் போகிறோம். எனவே, கல்வித் துறையில் மாணவர்கள் நலனில் அரசியல் நடத்துவதை விட்டுவிட்டு பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகள் சிறிதும் பயமின்றி சிரித்து பேசிக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர்.
- வைரலான வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பயங்கரமான பாம்பை கயிறு போல வைத்துக்கொண்டு குழந்தைகள் ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 5 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கையில் கயிறை வைத்துக்கொண்டு கயிறு தாண்டுதல், ஸ்கிப்பிங் விளையாடுவது போன்று காட்சி உள்ளது. ஆனால் அவர்கள் அருகே காட்சி செல்லும் போது தான் அவர்கள் கயிறு போல பாம்பை வைத்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுவது தெரிகிறது.
அந்த குழந்தைகள் சிறிதும் பயமின்றி சிரித்து பேசிக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர். இதை வீடியோ எடுப்பவர்கள் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று காட்டுமாறு சிரித்து கொண்டே கேட்கிறார். அப்போது அவர்கள் தங்கள் கையில் இருப்பது மலைப்பாம்பு என கூறி அதை காட்டுகின்றனர். வைரலான இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்டில் எடுக்கப்பட்டதாகவும் அங்குள்ள பழங்குடியின குழந்தைகள், இறந்த மலைப்பாம்பை வைத்து விளையாடியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இறந்த பாம்புக்கு மரியாதை தராமல் அதை வைத்து விளையாடுவது சங்கடமாக உள்ளது என பயனர் ஒருவர் பதிவிட்டார்.
- சச்சின், ரோகித் தொடக்க வீரர்களாக கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
- இந்த அணியில் பும்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, உலகின் சிறந்த ஒருநாள் அணியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏழு ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்துக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
மூன்றாம் வரிசையில் விராட் கோலியும் நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1983-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.
2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் ஐந்தாம் வரிசையிலும் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆறாம் வரிசையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.
சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகிய நான்கு வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது சிறந்த ஒருநாள் அணியில் இடம் அளித்துள்ளார்.
அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார்.
1983 உலகக் கோப்பை வென்ற மொஹிந்தர் அமர்நாத் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி:
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.
- தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர்.
- தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
செங்கல்பட்டில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நீர் நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீர் நிலைகளில் செங்கலு நீர் பூக்கள் அதிகமாக இருப்பதால் செங்கலு நீர்பட்டு என்று அழைக்கப்பட்டு இன்றைக்கு தலைநகர் சென்னையோட நுழைவு வாயிலாக இருக்க கூடிய இந்த செங்கல்பட்டு. சிற்பக் கலையும், அதனுடைய சிறப்பையும் தமிழ் கலை பெருமையை சொல்லும் மாமல்லபுரம் உள்ள மாவட்டம் இந்த செங்கல்பட்டு. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து கழக ஆட்சி காலத்தில் மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ. பிலெக்டரானிக்ஸ், பாக்ஸ் கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ்., சீமென்ஸ், நிதான், போர்ட், அப்பல்லோ டயர்ஸ், பல்லாவரத்தில் தமிழ்நாடு டாடா பார்மா சூட்டில்கல் தொழிற்சாலை.
மறைமலைநகரில் மெட்ராஸ் மெக்னடிக் மீடியா லிமிடெட் தொழிற்சாலை 532 ஏக்கர் நிலத்தில் எம்.பி.பி.எல். புதுப்பிக்கப்பட்ட நிறுவனம், திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் எந்திரங்கள் மூலம் உப்பு உற்பத்தி தொழிற்சாலை, ஸ்ரீராம் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சிங்கபெருமாள் கோவில் அருகே மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இப்படி தமிழ்நாட்டோட வளர்ச்சிக்கான நுழைவு வாயிலை உருவாக்கியது நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.
இயற்கை வளம், கலைப்பெருமை, தொழில் வளர்ச்சி என சிறந்து விளங்கும் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த அரசு விழாவை மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருக்க கூடிய பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசனை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
ஏராளமான குறு-சிறு நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதிலே இவருடைய பங்கும் இருக்கிறது. அவரது உழைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கனவுகளை சட்டத்தின் மூலம் நனவாக்கியவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டம் 7.5.1989-ல் சட்டசபையில் நிறைவேற்றியவர் கலைஞர்.
பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கோலோச்சுகின்றனர். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது இந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 800 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று திமிராக பேசுகிறார் மத்திய மந்திரி. தேசிய கல்விக்கொள்கை, தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியையே அழித்து ஓழித்து விடும். கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கைதான் தேசிய கல்விக்கொள்கை. பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும். கல்வியில் மதவாதத்தை புகுத்த தேசிய கல்வி கொள்கை முயற்சிக்கிறது. கல்வியில் ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
- நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்கள், டெல்டாவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
* நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
* தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
- தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
சென்னை:
தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.
சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது. 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதையும் அதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஷியா மீது உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று காலை தலைநகர் மாஸ்கோ உள்பட 10 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்து வந்தன. அவற்றை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மாஸ்கோவை குறிவைத்து இயக்கப்பட்ட உக்ரைனின் சுமார் 70 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் 10 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக குர்ஸ்க் பகுதியில் 126 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டிரோன் தாக்குதலை தொடர்ந்து இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
- பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் அணிவகுத்து நடந்தனர்.
- பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல டிசைனர்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா சேர்ந்து நடத்தும் ஆடம்பர பேஷன் பிராண்டான ஷிவன் & நரேஷ். இந்நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மார்ச் 7 ஆம் தேதி குல்மார்க்கில் ஒரு பேஷன் ஷோவை அவர்கள் நடத்தினர்.
அவர்கள் வடிவமைத்த ஆடைகளை அனைத்து மாடல்கள், பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் அணிவகுத்து நடந்தனர்.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் இந்த பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பாரூக் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து, இது அநாகரீகமானது என்றும் காஷ்மீரின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் கண்டிடிருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்திலும் இந்த பேஷன் ஷோ விவாதப்பொருள் ஆனது. இதுதொடர்பாக அவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, குல்மார்க்கில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு தனியார் நிகழ்ச்சி. இதில் அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது.
எனினும் இந்த ஆடை அணிவகுப்பு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் இந்த ஷோவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் ரீதியாக தங்கள் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'புனித ரம்ஜான் மாதத்தில் குல்மார்க்கில் நடந்த எங்கள் பேஷன் ஷோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

எங்கள் நோக்கம் படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டாடுவது மட்டுமே, யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல.
நாங்கள் அனைத்து கலாச்சாரங்களையும் மரபுகளையும் மதிக்கிறோம், மேலும் உங்களின் கவலைகளை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.
சிரமத்திற்கு நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் இருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.
- கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
படம் தொடர்பான அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், கூலி படத்தின் டீசர் வருகிற 14-ம் தேதி வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மார்ச் 14-ம் தேதி கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதன்படி இயக்குநரின் பிறந்தநாளில் கூலி படத்தின் டீசர் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






