என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • இன்றைய சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
    • வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் பங்கேற்க மாட்டேன்' என்றார். இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்நிலையில், செங்கோட்டையன் வரும் 9-ந்தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். எதிர்பாராத வரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

    ரிஷபம்

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அலைச்சல்கள் உண்டு.

    மிதுனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.

    கடகம்

    யோகங்கள் ஏற்படயோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சஞ்சலங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்ற மனக்குழப்பம் ஏற்படும்.

    சிம்மம்

    எடுத்த முயற்சி பலன் தரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வருங்காலக் கனவுகளை நனவாக்கப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி பெறும்.

    துலாம்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

    விருச்சிகம்

    மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    தனுசு

    மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    மகரம்

    மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    கும்பம்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    மீனம்

    அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பக்குமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

    • ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது.
    • இத்தனை நாளும் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    #Germany-யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!

    அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.

    இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி நள்ளிரவு 12.32 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : சதயம் இரவு 11.13 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய முழு சந்திர கிரகணம், காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம்

    இன்று ராகு கிரஸ்த முழு சந்திர கிரகணம். தொடக்கம் இரவு மணி 9.51 மத்யமம் (நடு)இரவு மணி 11.42. முடிவு பின்னிரவு 2.25 மணி வரை சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் இந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-நிறைவு

    சிம்மம்-பரிசு

    கன்னி-வரவு

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- பக்தி

    மகரம்-சாந்தம்

    கும்பம்-உவகை

    மீனம்-ஈகை

    • சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
    • பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.

    காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.

    கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.

    மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.

    முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
    • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.

    பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.

    பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நியமனத்தின் மூலம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.

    பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு குடிபெயர்ந்த பெற்றோர்க்கு 1980 இல் பிறந்தார் ஷபானா.

    புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

    2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.

    கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்தார். 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார்.    

    • ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.
    • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

     பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024 முதல் ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.

    ஏழு விதிமீறல்களில் ஆறு, முதல்வர் வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியாததற்காக இருந்தன. மேலும் வானம் அதிவேகமாக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன. 

    விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே ரூ.2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

    • கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் செல்கின்றனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா பகுதியில் உள்ள கிராமங்களில் நிர்வாண கும்பல் என அழைக்கப்படும் மர்மக் கும்பலால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    விவசாய நிலங்களில் இருந்து திடீரென நிர்வாணமாக வெளியே வரும் நபர்கள், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    பாராலா கிராமம் அருகே, சில நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற பெண் ஒருவரை அவ்வாறு 2 பேர் சூழ்ந்தனர். அந்தப் பெண் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.

    அவமானத்தால் இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன் வெளியே கூறப்படாமல் இருந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவதாக பாராலா கிராமத் தலைவர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.

    குற்றவாளிகளைப் பிடிக்கவும், மக்களின் அச்சத்தைப் போக்கவும் கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிரோன்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. 

    • விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
    • மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்ட்டது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயாத் புத்தா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

    மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலயாத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.

    விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' என்ற வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.   

    • டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார்.
    • அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்

    ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

    இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவார்.

    இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.

    ×