என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும்.

    நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

    மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தொலைபேசி எண்: 011-24193300

    கைபேசி எண்: 9289516712 (whatsApp)

    மின் அஞ்சல்: Inhouse@tn.gov.in. proofficetnh@gmail.com

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள்.
    • இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.

    50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

    இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது.

    இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    • ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
    • அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன: கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    1997-ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாதுகாப்பு 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு 5 , Alembic Pharmaceuticals Ltd. v. Rohit Prajapati & Ors. (2020) வழக்கில், மாண்புமிகு உச்சநீதிமன்றம், அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு. 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணைமய உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துவதாகவும். கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல. நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருளணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் நாளை முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
    • விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார்.

    2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.

    முன்னதாக பிரசார வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது.

    உங்கள் விஜய் நான் வரேன் என்ற வாசகத்துடன் பனையூரில் இருந்து பிரச்சார வாகனம் புறப்பட்டது.

    அதன்படி, திருச்சியில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.

    • காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.

    நமது அண்டை நாடான நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குழுவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் நேபாள தலைநகர் காத்மாண்டு கலவர பூமியாக மாறியது. இதனால் காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் காத்மாண்டுவுக்கு புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர்கள் குழுவினர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பஸ்சில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது. அவர்கள் சரமாரியாக கற்களை வீசி பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள், மொபைல்போன்கள், ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இதையடுத்து சேதம் அடைந்த சுற்றுலா பஸ் உத்தரபிரதேச மாநில எல்லையான சோனாலிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் சென்ற பக்தர்கள் அனைவரும் மத்திய அரசு உதவியுடன் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

    • மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும்.
    • நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும்.

    டெல்லி:

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. பின்னர், இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

    • சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தில் 5-ல் ஒரு பங்கு மகனுக்கு தரப்பட வேண்டும் என கரிஷ்மா கபூர வழக்கு.
    • கரிஷ்மா கபூருக்காக மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி ஆஜராக வாதாடினார்.

    சஞ்சய் கபூர் திடீரென காலமானதால், அவருடைய சொத்துக்காக தற்போதைய மனைவி மற்றும் கரிஷ்மா கபூருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    தொழில் அதிபர் சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பாக கரிஷ்மா கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் சஞ்சய் கபூரின் முன்னாள் மனைவி ஆவார். இவரது மகனுக்கு ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். சஞ்சய் கபூர் தன்னுடைய சொத்துகள் அனைத்தும், 2ஆவது மனைவி பிரியாவுக்கு எனக் கூறப்படுவதை எதிர்த்து, அவர் அதுபோன்று உயில் ஏதும் எழுதிவைக்கவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    கரிஷ்மா கபூர் தொடர்ந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கரிஷ்மா கபூர் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி ஆஜரானார். சஞ்சய் கபூரின் மனைவி பிரியா சார்பில் வழக்கறிஞர் நாயர் ஆஜரானார்.

    விசாரணையின்போது ஜெத்மலானி: ஏனென்றால் என நாயர் வாதத்தின்போது குறுக்கிட முயன்றார்.

    அப்போது நாயர் "தயவு செய்து என்னுடைய வாதத்தின்போது குறுக்கிட வேண்டாம். எனக்கு குறுக்கீடு பிடிக்காது" என்றார்.

    உடனே ஜெத்மலானி, "அப்படி என்றால் தனியாகத்தான் வாதிட வேண்டும். என்னிடம் கத்த வேண்டாம். தயவு செய்து என்னிடம் கத்தாதீர்கள்" என்றார்.

    நாயர் மீண்டும் "நீங்கள் என்னை குறுக்கீடு செய்கிறீர்கள்" என்றார்.

    ஜெத்மலானி அதற்கு, "என்னைப் பார்த்து கத்தாதே. கவுன்சிலுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கவும். நீ கத்தினால், உனக்கு நாணயமாக பணம் திரும்பக் கிடைக்கும்" என்றார்.

    அதற்கு நாயர் "உங்களுக்கு பழக்கமில்லையா.." என்ற தொணியில் பேச நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.
    • மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது.

    இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது.

    கிராமப்புற பொருளாதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்க முடியும்.

    ஆனால்,இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 9.27 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை கோரி தமிழ்நாட்டில் 85.70 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன.

    அவர்களில் 74.95 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. எனினும், அவர்களில் 30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 20.61 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாள்கள் வேலை வழங்கப்படும் மாறாக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள மனித நாள்களுக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்கள் குறைக்கும்படி ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு திமுக அரசு ஆணையிட்டுள்ளது.

    அதனால் தான் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 35 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 9 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.

    அதையாவது திமுக அரசு வழங்குமா? அல்லது 12 கோடி நாள்களைத் தாண்டக் கூடாது என்ற எண்ணத்தில் இனிவரும் நாள்களில் வேலைவாய்ப்பைக் குறைத்து விடுமா? என்பது தெரியவில்லை.

    வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 2023-24ஆம் ஆண்டில் ரூ.12,136 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.7587 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கியது. ஆனால், நடப்பாண்டில் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரூ.5053 கோடியை மட்டும் தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டிற்கும் முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவு ஆகும்.

    ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. மனிதத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் ஆகும். கடந்த காலங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கூடுதல் தொகைக்கு வேலை வழங்கி விட்டு, அதை மத்திய அரசிடமிருந்து பெற்ற வரலாறு உள்ளது. அதே நிலையை இப்போது எடுக்காவிட்டால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய தொகையில் ரூ.10,000 கோடி வரை இழக்க வேண்டியிருக்கும். மாநில அரசின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் திமுக இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன்?

    நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம்.
    • அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக 'மனசாட்சி உள்ள மக்களாட்சி'யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது.மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.

    நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன். ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம்.

    இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

    கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொது மக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாகப் பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாகக் காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளைக் கடமை, கண்ணியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் "உங்க விஜய், நான் வரேன்". நல்லதே நடக்கும்.

    • ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும்.
    • பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

    ஹோண்டா நிறுவனம், அதன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து, ரூ.18,887 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹோண்டா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலன்களை வழங்க உள்ளது.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் பிரீமியம் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய பைக்குகள் (350 சிசிக்கு மேல்) தவிர, மற்ற பைக் மாடல்கள் அனைத்தும் விலைக் குறைப்பைக் கண்டுள்ளது.



    இதில் ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும். 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பைக்குகளுக்கான விலைக் குறைப்பை ஹோண்டா அறிவித்துள்ளது.

    ஆனால் அதன் பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 31 சதவீதத்திலிருந்து 40 சதவீத வரி விதிக்கப்படும்.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரியலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
    • ஏற்கனவே திருச்சியில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரியலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி கீழப்பாவூர், வாரணாசி, கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பரப்புரையை முடித்து அண்ணா சிலை, கல்லங்குறிச்சி ரவுண்டானா வழியாக குன்னம் செல்கிறார் தவெக தலைவர் விஜய்.

    ஏற்கனவே திருச்சியில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது.

    • 11 வயதாக இருக்கும்போது 23 வயதிற்கு உட்பட்டோருக்கான வேகப்பந்து வீச்சு முகாமுக்கு சென்றேன்.
    • 7ஆவது அல்லது 8ஆவது இடத்தில் களம் இறங்கி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணி துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில், 6 வருடத்திற்குள் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

    சுப்மன் கில், தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய 11 வயதில், கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

    நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு 11 வயது இருக்கும்போது, கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப் போகிறது என உணர்ந்தேன். 23 வயதுக்கு உட்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. அப்போது எனக்கு 11 வயதுதான். அங்கிருந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் என்னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயது அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் சற்று குறைவாக இருந்தனர்.

    நான் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் நெருங்கிய நண்பருமான குஷ்ப்ரீத் உடன் பயிற்சி மேற்கொண்டேன். குர்ஷ்பீரித் வேகப்பந்து வீச்சாளர். அவர் பயிற்சியாளரிடம் சென்று, நம்மிடம் பேட்ஸ்மேன்கள் குறைவு. அதனால் என்னை களம் இறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் என்னையும், எனது நண்பரையும் களம் இறக்கினார்.

    நான் 7 அல்லது 8ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினேன். அணியின் முன்கள வீரர்கள் நான்கு அல்லது ஐந்து ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். 90 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தேன். அந்த தருணம், அந்த இன்னிங்ஸ், பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த தருணம்தான் இனிமேல் கிரிக்கெட்டுதான் தொழில் என்பதை உணர வைத்தது.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    ×