என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு.
    • கழுத்தில் குண்டு பாய்ந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிர் பிரிந்தது.

    அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31). ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

    இதன்மூலம் தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்தார். இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவது வழக்கம்.

    அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

    பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

    அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை.

    புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த மதுபானமும் விற்க கூடாது என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

    18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க கூடாது என கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உத்தரவை மீறி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

    'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • கண்ட்லா விமான நிலையத்தில் டேக்ஆஃப் ஆனபோது டயர் கழன்று விழுந்தது.
    • மும்பை விமான நிலையத்தில் தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.

    குஜராத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும்போது டயர் கழன்று விழுந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா விமான நிலையத்தில இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. டேக்ஆஃப் ஆன நிலையில் டயர் ஒன்று கழன்று விழுந்தது. இதை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது என தொடர்ந்து சத்தம் போடுவது வீடியோவில் பார்க்க முடிந்தது.

    மும்பை விமான நிலையத்தில தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

    முன்னெச்சரிக்கை காரணமாக தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால், எப்போதும் பரபரப்பாக இயங்கப்படும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானத்தில் சுற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
    • ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

    அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.

    இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
    • பராசக்தி படத்தில் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பராசக்தி திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு றிவித்துள்ளது.

    • வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் தீவிர ஆலோசனை.
    • குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்பு இருப்பதாக கூறப்பட்டது.

    நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர். இன்னும் வன்முறை ஓய்ந்த பாடில்லை.

    இந்த வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் காசியாபாத்தை சேர்ந்தவர். மூன்று போலீசார் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இடைக்கால அரசு அமைத்து வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம், போராட்டுக்குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    முதலில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை தளபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நேபாள மின்சார ஆணையம் தலைவர் குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

    இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

    இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில், இளையராஜா பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து தயாராக உள்ளது.

    • வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும்.
    • கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நம் வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (13.09.2025) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்கள். தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்.

    ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

    1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    2. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    3. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    4.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    5. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

    6. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

    7. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

    பள்ளி 10.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

    11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

    12.தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    • புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும்.

    நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

    மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தொலைபேசி எண்: 011-24193300

    கைபேசி எண்: 9289516712 (whatsApp)

    மின் அஞ்சல்: Inhouse@tn.gov.in. proofficetnh@gmail.com

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள்.
    • இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.

    50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

    இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது.

    இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    ×