என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.
சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.
அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.
இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






