என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கிரிக்கெட்டுதான் தொழில் என உணர்ந்த தருணம்: சிறுவயது நினைவை பகிர்ந்த சுப்மன் கில்..!
- 11 வயதாக இருக்கும்போது 23 வயதிற்கு உட்பட்டோருக்கான வேகப்பந்து வீச்சு முகாமுக்கு சென்றேன்.
- 7ஆவது அல்லது 8ஆவது இடத்தில் களம் இறங்கி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணி துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில், 6 வருடத்திற்குள் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
சுப்மன் கில், தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய 11 வயதில், கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு 11 வயது இருக்கும்போது, கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப் போகிறது என உணர்ந்தேன். 23 வயதுக்கு உட்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. அப்போது எனக்கு 11 வயதுதான். அங்கிருந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் என்னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயது அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் சற்று குறைவாக இருந்தனர்.
நான் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் நெருங்கிய நண்பருமான குஷ்ப்ரீத் உடன் பயிற்சி மேற்கொண்டேன். குர்ஷ்பீரித் வேகப்பந்து வீச்சாளர். அவர் பயிற்சியாளரிடம் சென்று, நம்மிடம் பேட்ஸ்மேன்கள் குறைவு. அதனால் என்னை களம் இறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் என்னையும், எனது நண்பரையும் களம் இறக்கினார்.
நான் 7 அல்லது 8ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினேன். அணியின் முன்கள வீரர்கள் நான்கு அல்லது ஐந்து ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். 90 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தேன். அந்த தருணம், அந்த இன்னிங்ஸ், பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த தருணம்தான் இனிமேல் கிரிக்கெட்டுதான் தொழில் என்பதை உணர வைத்தது.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.






