என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக கூறிக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை துறையூர் அருகில் போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
நட்பாக பழகி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
- காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* பா.ம.க. நிறுவனர் ராமதாசை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றி விட்டார்கள்.
* பா.ம.க.-விற்குள் பதவி போட்டி சண்டை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக-தான்.
* பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களுக்கு அன்புமணி வலியுறுத்தல்
* பா.ம.க.-வின் எதிரி திமுக-தான்
* காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.
* வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
* பாமக-வின் கட்சி, சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து பொய்யை பரப்புகிறார்கள்.
* பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
- புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
- கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
நாகர்கோவில்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சரின் சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, பிப்ரவரி 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு அவர் நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வருகை தருவது தி.மு.க. நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகை குமரி மாவட்ட தேர்தல் களத்தை சூடுபடுத்தி உள்ளது.
- வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.
- போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர்:
மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே, கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணன் வழக்கம் போல் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின் அவரை கடுமையாகக் கண்டித்துள்ளார். பின்னர் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவி கண்டித்துவிட்டுச் சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் பூச்சி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் வீட்டிற்குள்ளேயே கிடந்தது.
தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணன் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறு தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
- நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- காங்கிரசில் ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம்.
- எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- தி.மு.க. தோல்வி பயம் காரணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நாங்கள் இப்போது கொடுக்கவில்லை.
மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. வுடன் சேர்ந்து கொண்டு இந்த திட்டத்தை தடுக்க சதி திட்டம் தீட்டினார்கள்.
அந்த சதி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்ததால் அதற்கு தடை வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே பணத்தை கொடுத்துள்ளார்.
கே:- தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று முதலமைச்சர் அறிவித்த பிறகும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பாக மீண்டும் பேசுகிறார்களே?
ப:- நாளையில் இருந்து யாரும் பேசமாட்டார்கள். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு மக்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதனால் இனி பேசமாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார். ராகுல்காந்தி முதல் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
காங்கிரசில் ராகுல்காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.
ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
கே: திருச்சி மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்பார்களா?
ப: தலைவர் அது பற்றி சொல்வார் என்றார்.
- காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன்.
- காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு டீ 1 ரூபாய் மட்டுமே என்று கூறி கடை முன்பு விளம்பர பலகையும் வைத்துள்ளார்.
இந்த அறிவிப்பு விளம்பர பலகையாக வைக்கப்பட்டதில் இருந்தே அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பஸ் பயணிகள் மற்றும் சினிமா தியேட்டருக்கு வருபவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன். சுத்தமான பசும்பால் மற்றும் இஞ்சி சேர்த்து சுவையாக தயாரிக்கப்படும் இந்த டீ, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை.
காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. அது 20 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமானது. காதல் என்பது புனிதமானது. அது வெறும் வயது சம்பந்தப்பட்டது அல்ல. காதலை யாரும் கொச்சையாக பார்க்க வேண்டாம். காதல் என்ற உணர்வை அன்போடு அணுக வேண்டும். மக்களிடையே அன்பும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை எடுத்தோம்.
நேற்று மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இன்று 300 பேரை தாண்டி மக்கள் வந்து டீ அருந்தி செல்கின்றனர். இது வெறும் லாபத்திற்காக செய்வது அல்ல, இந்த காதலர் தினத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பமே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காதலர் தினத்தை ஒரு வணிக நோக்கமாக பார்க்காமல், சமூகத்தில் அன்பை பகிரும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் இவரின் செயலை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமெனில் பா.ஜ.க., பீகாரில் என்ன செய்தது என கேள்வி கேட்க வேண்டும்.
- மக்களுக்கான முதல்வராக, மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க., த.வெ.க.வை போட்டியாக கருதுகிறது என்ற விஜய் தெரிவித்துள்ளார். யாரையும் நாங்கள் போட்டியாக கருதவில்லை. அனைவரையும் நண்பர்களாக தான் கருதுகிறோம். எல்லோரையும் தாண்டி தான் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள், மக்களிடம் சென்று சேர்ந் துள்ளது. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மக்களுக்கான முதல்வராக, மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.
யார் எதைச் சொன்னாலும், மக்கள் தமிழ்நாடு முதல்வர் பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கியிருப்பது குறித்து முதல்வர் ஏற்கனவே தெளிவாக சொல்லியுள் ளார். சில குறுக்கு மதியாளர்கள் இந்த திட்டத்தை நீதிமன்றம் சென்று தடை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தலுக்கு முன்பாகவே உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 28 மாதங்களாக வழங்கப்பட்ட உரிமைத் தொகை, இப்பொழுது தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் முன்கூட்டியே வழங்கப் பட்டுள்ளது. நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமெனில் பா.ஜ.க., பீகாரில் என்ன செய்தது என கேள்வி கேட்க வேண்டும். பீகாரில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்காமலேயே, தேர்தலின் பொழுது திடீரென 10 மாத தொகையை சேர்த்து வழங்கினார்கள். அதையும் பிரதமரே நேரடியாக சென்று வழங்கினார்.
தமிழ்நாட்டில் 3 மாதத் துக்கான தொகை முடக்கப் படலாம் என்ற தகவலின் அடிப்படையில், முன்கூட் டியே அவர்களுக்கு உரிமைத்துறை வழங்கப்பட்டு உள்ளது. மோடியை தன் மீது சவாரி செய்ய அ.தி.மு.க. அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு அமைந்ததும், பிரதமர் மோடி ஆட்சி செய்வார் என்று கூறியதன் மூலம் மத்திய அரசிடம் தமிழ் நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள் ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
- அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட விமர்சனம். இருந்தாலும் அவர் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும், அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். தி.மு.க. அரசு முடிவுக்கு வந்துவிடும்.
கூலிப்படை தான் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் நடக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் தி.மு.க. கூட்டணியில் இருக்க போகிறார்களா, இல்லையா என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கட்டிஷனில் இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமா என்ற கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்ஸன் வந்தாலும் கவலை இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை, இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் என்றார்.
- பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்?
- மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் , மலைவாழ் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடுமலை அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
மருத்துவமனைக்குட்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, உணவு தயாரிக்கும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காயம் அடைந்தவருக்கு செவிலியர் சிகிச்சை அளிக்காமல் மருத்துவ பணியாளர் சிகிச்சை அளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே செவிலியரை அழைத்து அறிவுரைகள் கூறி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது குறித்து மாவட்ட மருத்துவ இயக்குனரிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்? அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசர சிகிச்சை பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் ஏன் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையை நீங்கள் ஆய்வு செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு முன்புறம் ஏன் வீல் சேர் வைக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
உடுமலை அருகே நேற்றிரவு சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழக முழுவதும் ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அ.தி.மு.க சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.
இதுவரை தமிழக முழுவதும் 181 தொகுதிகளில் அவர் பிரசாரம் முடித்துள்ளார். இந்நிலையில் 182-வது தொகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அந்தப் பகுதியில் தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கும் போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசி வருகிறார். இதனால் நாளை நடைபெறும் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
- தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.






