என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
- மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.
திருவாரூர்:
மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித் துறையும் இணைந்து தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தியது.
இதில் நாடு முழுவதும் இருந்து 2 கோடி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் திருவாரூர் ஜிஆர்எம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு பயிலும் மாணவி வைகயோஷனா கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டார்.
இவர் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரையில் நீரா ஆர்யா சுதந்திரப்போராட்ட காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகள், கணவரே அவரை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுக்க முற்பட்டபோது, கணவர் என்றும் பாராமல் அவரை கொலை செய்து தேசபக்திதான் முக்கியம் என்பதை முன்னிறுத்தி வாழ்ந்து மறைந்த தியாக வரலாறு குறித்து எழுதி இருந்தார்.
அவரது இந்த கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுரை போட்டியில் வென்ற மாணவி வைகயோஷனாவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த விழாவில் மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து மாணவி வைகயோஷனாவை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசரிரியர்கள் பாராட்டினர். டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 5 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் வரை வழித்தடத்தில் மட்டும் 3762 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க 650 மீட்டர் நீளமுள்ள எல் வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பருவமழை மற்றும் இரும்பு கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேம்பாலத்தின் மத்திய பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு பணிக்கான இடம் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் தற்போது அடையாரில் இருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராக செல்ல அனுமதிக்க உள்ளனர்.
சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் எல் வடிவ மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் நிறுவனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு, நெரிசலான மத்திய கைலாச சந்திப்பை தவிர்த்து தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மூன்று வழி மேம்பாலம் கட்ட கையெழுத்திடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுழற்சி முறையில் மாற்றங்களை செய்ய மாநில நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளன.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து (கோட்டூர்புரம்) கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் கீழ் யு வடிவ திருப்பம் செய்து இடது புறமாக திருப்பி விடப்படும்.
அடையாறு, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்திற்கு முன்னால் சிக்னல் இல்லாத வலது புறம் திரும்பும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சர்தார் படேல் சாலையில் இருந்து (அண்ணா பல்கலைக்கழகம் பக்கம்) கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மேம்பாலம் 652 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.
சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. சர்தார் படேல் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது.
பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இந்த சாலையின் மேம்பாட்டிற்கு ரூ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை மேம்படுத்துதல் மற்றும் ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்பு சுவர் கட்டுதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி முதல் அண்ணாசாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் முதல் கட்டமாக ஐ.ஐ.டி. முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கிலோ மீட்டர் தூர பணிகள் தொடங்கும். அதனை தொடர்ந்து ராஜ் பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
- தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பா.ஜ.க. தலைவர்களுக்கு விருந்து அளித்து தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இவை பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகள் வரையில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.ம.மு.க.வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு 17 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அன்புமணிக்கு மேல்சபை எம்.பி. பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இடையேயான இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அனைத்து கூட்டணி கட்சிகளோடும் இணைந்து ஒற்றுமையுடன் சந்திப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு எதிராக வியூகம் அமைத்து செயல்படுவது பற்றியும் இன்றைய சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி கட்சி தலைவர்களோடு இணைந்து பொதுக் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் அதில் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் பியூஸ் கோயல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த மாதம் வரையில் பா.ஜ.க. கட்சி மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் புத்தாண்டு பிறந்த பிறகு அந்த கூட்டணியில் அதிரடி திருப்பமாக அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலை மெகா கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். அப்போது எல்லாம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஏளனம் செய்தார்கள். அவர்களது வாயை எல்லாம் அடைக்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. இதே வேகத்தோடு சென்று நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தே.மு.தி.க.வும் விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி கூட்டணி இறுதி செய்யப்பட்டதும் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்து விட்டு அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
- மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்தார். அப்போது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி சென்று விழுந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.
செருப்பு வீசிய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
- மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
* சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
- தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை.
- சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார்.
- கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
- விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் சமீப காலமாகவே கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழை காலங்களில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால் இப்போதெல்லாம் கோடை காலத்தில் கூட கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. மழைக்காலம், குளிர்காலம், கோடை காலம் என எல்லா பருவ காலத்திலுமே சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகரித்தே வருகிறது.
அதிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டது. புற்றீசல் போல பல்கிப் பெருகிய கொசுக்கள் காரணமாக சென்னை மக்கள் பெரும்பாலானோர் இரவு தூக்கத்தை தொலைப்பது தினமும் அரங்கேறி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பொது வெளியில் சாலையோரம் சிறிது நேரம் நின்றாலே கொசுக்கள் மொத்தமாக மொய்த்துக்கொண்டு கடிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தாங்க முடியாத சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்களில் கொசுமருந்து புகை அடிப்பது பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், அதனால் கொசுக்கள் ஒழியவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொசுவர்த்தி ஏற்றினாலும், கிரீம் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு கொசுக்கள் சீக்கிரமே பழகி விடுவதாகவும், அதனால் நிரந்தர பலனில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கும் ஸ்பிரே உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக கையாண்டு வருகிறார்கள். மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தும் திட்டம் தான் அது. முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழச் செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் தொட்டி மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.
இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொசுவலை முயற்சியால் உண்மையிலேயே பயன் இருக்குமா என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெர்மாக்கோல் மிகவும் பிரபலமானதை யாரும் மறந்துவிட முடியாது. வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அணை நீரின் மேற்பரப்பில் தெர்மாகோலை மிதக்கவிட்டார். ஆனால் தண்ணீரில் ஏற்பட்ட அலையால் அனைத்து தெர்மாக்கோல்களும் சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த தெர்மாக்கோல் முயற்சியுடன், இந்த கொசுவலை முயற்சியை தொடர்புபடுத்தி 'அன்று தெர்மாக்கோல் இன்று கொசுவலை' என்று பலரும் இப்போது நகைச்சுவையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
'கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி... வாகன ஓட்டிகளே உஷார்!', கொசு வலைகளை கரையான் அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கப்படுமா?, 'கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி... நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி!', 'தெர்மாக்கோல் சம்பவமே இதைவிட பரவாயில்லை போல!', 'மதுரைக்கு தெர்மாக்கோல்,,, சென்னைக்கு கொசுவலை...' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
திரைப்படத்தில் வரும் 'என் கட்சிக்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பிரமாண்டமான கொசுவலையை வாங்கி தொகுதி முழுவதும் பந்தல் போட்டு மூடி இருப்பேன்... என்னால் முடியவில்லையே...' என்று நடிகர் வடிவேல் பேசும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள்.
கவுண்டமணி, செந்தில் காமெடியில் செந்தில், கவுண்டமணியிடம், செந்தில் கேள்வி எழுப்புகிற 'மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்? மான் இருக்கும். கொசுவுக்கு வலைபோட்டா வலைக்குள் என்ன இருக்கும்? என்ற காமெடியையும் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ சென்னையில் கொசு ஒழிந்தால் போதும்... அதுதான் பொதுமக்களின் விருப்பம்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
- 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சியை போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை.
* நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்.
* அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும்.
* 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
* அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
- மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
சட்டசபையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.
* 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
* ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
* கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
* கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
* ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.
* 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை.
* பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விட்டு அரசு பின்வாங்குவது ஏன்?
* மகளிருக்கு ரூ.1500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021-ல் ஏற்கனவே அறிவித்தோம்.
* ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும்.
* மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
* மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது.
* மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீது வெறுப்பு, அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குன்னம் ராமச்சந்திரன் 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் ராமச்சந்திரனை தோற்கடித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வென்றார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து நேற்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?
அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
- உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
- உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் "செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார்.
இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 7 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் ஹிந்தி, உருது மொழி இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவிமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்குச் செம்மொழி இலக்கிய விருது ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
இந்தப் பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.
உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. உருது மொழியின் பல பிரபல முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளனர். எடுத்துக்காட்டாக பிரேம்சந்த் உடைய கதைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது பிராக் கவுரக்பூரி உடைய கஸல்களும் மிகவும் பிரபலமானதாக உள்ளது
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வரும் வரை சுமார் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்களின் ஆட்சி மொழி. பாரசீக மொழி அதனோடு அரபு மொழி கலந்து அதுவே காலப்போக்கில் உருது மொழியாக உருவெடுத்தது.
ஹிந்தி மொழிக்கும் உருது மொழிக்கும் உள்ள வித்தியாசம், ஹிந்தி மொழி பாரசீக மொழியோடு சமஸ்கிருதத்தை கலந்ததாக இருக்கிறது, உருதுமொழி பாரசீக மொழியோடு அரபி மொழி கலந்ததாக இருக்கிறது.
உருது மொழி பாரசீக மற்றும் அரபி இலக்கணம் மற்றும் எழுத்து வடிவங்களைக் கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுத்து வடிவத்தை இலக்கணத்தைக் கொண்டது.
இந்தியா முழுவதும் உள்ள மக்களால் பேசப்படும் மொழிகளில் உருது மொழி ஐந்தாவது பெரிய மொழியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு இருக்கிறார்கள்.
ஹிந்தி திரைப்படங்களில் உள்ள வசனங்கள் மட்டுமே ஹிந்தி மொழியில் இருக்கிறது, பாடல்கள் அனைத்தும் உருது மொழியிலேயே அமைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை இந்துஸ்தானி இசை, கஜல் இசை, கவாலி இசை போன்ற இசைகள் உருது மொழியினால் தான் உருவாகியிருக்கிறது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் உருது மொழி இடம் பெற்று இருப்பதும் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அரசின் அதிகாரப் பூர்வமான மொழியாகவே உருது மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே உருது மொழியின் தனிச் சிறப்புத் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






