என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய கைலாஷ்"
- தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரம் மற்றும் பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர அவசர மாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது.
உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த தி.மு.க. கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.
மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும்.
எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க தி.மு.க. அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கக்கூடும்.
- ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் மத்திய பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி, ராஜீவ்காந்தி சாலை வரை மொத்தம் 652 மீட்டர் நீளத்திற்கு எல் வடிவத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதற்கு அடுத்த சில நாள்களிலேயே, அதாவது கடந்த 18-ந்தேதி அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த நான், அப்பாலம் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதையும், அந்த பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தேன். அது உண்மை என்பதை ஒட்டுமொத்த சென்னையும் ஒப்புக்கொண்டு உள்ளது.
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கக்கூடும். வழக்கமாக பாலங்கள், மெட்ரோ ரெயில் கட்டுமானங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த எம் 90 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்படும்; குறைந்தபட்ச வலிமையாவது பாலத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால், எம் 50 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், எல் வடிவ மேம்பாலம் கட்ட எம் 40 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் பாலம் தரமற்றதாக இருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேற்கண்ட இரண்டில் எந்த காரணமாக இருந்தாலும், அது பாலத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்றும், பாலத்தின் அடிப்பக்கத்தில் இருந்து விரிசல்களும், வெடிப்புகளும் ஏற்படக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். பாலத்தின் மேற்பரப்பின் மீது கான்க்ரீட் கலவை சம அளவில் பரப பப்படாதது, அதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் இதற்கு மூன்றாவது காரணமாக இருக்கலாம் என்றும், பாலத்தைத் தாங்குவதற்காக கட்டப்பட்டுள்ள தூண்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பது பாலத்தின் வலுவற்றத் தன்மைக்கு நான்காவது காரணமாக இருக்கக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும் நடைபெறும் ஊழலை விட எல் வடிவ மேம்பாலம் அமைப்பதில் கூடுதலாக ஊழல் நடந்ததன் விளைவு தான் அந்தப் பாலம் அவ்வளவு மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்; ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் வரை வழித்தடத்தில் மட்டும் 3762 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க 650 மீட்டர் நீளமுள்ள எல் வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பருவமழை மற்றும் இரும்பு கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேம்பாலத்தின் மத்திய பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு பணிக்கான இடம் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் தற்போது அடையாரில் இருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராக செல்ல அனுமதிக்க உள்ளனர்.
சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் எல் வடிவ மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் நிறுவனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு, நெரிசலான மத்திய கைலாச சந்திப்பை தவிர்த்து தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மூன்று வழி மேம்பாலம் கட்ட கையெழுத்திடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுழற்சி முறையில் மாற்றங்களை செய்ய மாநில நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளன.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து (கோட்டூர்புரம்) கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் கீழ் யு வடிவ திருப்பம் செய்து இடது புறமாக திருப்பி விடப்படும்.
அடையாறு, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்திற்கு முன்னால் சிக்னல் இல்லாத வலது புறம் திரும்பும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சர்தார் படேல் சாலையில் இருந்து (அண்ணா பல்கலைக்கழகம் பக்கம்) கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மேம்பாலம் 652 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.
சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. சர்தார் படேல் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது.
பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இந்த சாலையின் மேம்பாட்டிற்கு ரூ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை மேம்படுத்துதல் மற்றும் ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்பு சுவர் கட்டுதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி முதல் அண்ணாசாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் முதல் கட்டமாக ஐ.ஐ.டி. முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கிலோ மீட்டர் தூர பணிகள் தொடங்கும். அதனை தொடர்ந்து ராஜ் பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
- மரங்கள் குறைந்தபட்சம் 1 வருடம் பராமரிக்கப்பட உள்ளன.
- பிடுங்கி நட முடியாத 1,500 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
சென்னை:
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஒரே திசையில் இரு வழிப் பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் 640 மீட்டர் நீளம் கொண்டது. எல் வடிவத்தில் பாலம் அமைகிறது.
இந்த பாலம் அமைக்கப்பட்டால் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம். ஐ.ஐ.டி.யில் உள்ள மேம்பாலத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இந்த மேம்பாலம் அமைகிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் மட்டும் 60 சதவீத அளவுக்கு இந்த சாலையில் பயணிக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த மேம்பாலம் கட்டும் பணிக்காக சர்தார் படேல் சாலையில் இருந்து 75 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் மாற்றி நடப்பட்டன.
ஒரு மீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட மரங்கள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிபுணர் உதவியுடன் அகற்றப்பட்டன. பிடுங்கி நடப்பட்ட மரங்கள் தற்போது நன்றாக உள்ளன. அந்த மரங்கள் குறைந்தபட்சம் 1 வருடம் பராமரிக்கப்பட உள்ளன.
அதே நேரத்தில் பிடுங்கி நட முடியாத 1,500 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ரூ.30 லட்சம் செலவில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
- பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
- வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டது. மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அடையாறு பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டதால் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.






