என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பால கட்டுமானத்தில் ஊழல் - அன்புமணி குற்றச்சாட்டு
- கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கக்கூடும்.
- ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் மத்திய பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி, ராஜீவ்காந்தி சாலை வரை மொத்தம் 652 மீட்டர் நீளத்திற்கு எல் வடிவத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதற்கு அடுத்த சில நாள்களிலேயே, அதாவது கடந்த 18-ந்தேதி அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த நான், அப்பாலம் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதையும், அந்த பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தேன். அது உண்மை என்பதை ஒட்டுமொத்த சென்னையும் ஒப்புக்கொண்டு உள்ளது.
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கக்கூடும். வழக்கமாக பாலங்கள், மெட்ரோ ரெயில் கட்டுமானங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த எம் 90 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்படும்; குறைந்தபட்ச வலிமையாவது பாலத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால், எம் 50 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், எல் வடிவ மேம்பாலம் கட்ட எம் 40 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் பாலம் தரமற்றதாக இருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேற்கண்ட இரண்டில் எந்த காரணமாக இருந்தாலும், அது பாலத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்றும், பாலத்தின் அடிப்பக்கத்தில் இருந்து விரிசல்களும், வெடிப்புகளும் ஏற்படக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். பாலத்தின் மேற்பரப்பின் மீது கான்க்ரீட் கலவை சம அளவில் பரப பப்படாதது, அதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் இதற்கு மூன்றாவது காரணமாக இருக்கலாம் என்றும், பாலத்தைத் தாங்குவதற்காக கட்டப்பட்டுள்ள தூண்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பது பாலத்தின் வலுவற்றத் தன்மைக்கு நான்காவது காரணமாக இருக்கக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும் நடைபெறும் ஊழலை விட எல் வடிவ மேம்பாலம் அமைப்பதில் கூடுதலாக ஊழல் நடந்ததன் விளைவு தான் அந்தப் பாலம் அவ்வளவு மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்; ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






