என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • குன்னம் ராமச்சந்திரன் 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • 2021 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் ராமச்சந்திரனை தோற்கடித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வென்றார்

    சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து நேற்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?

    அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து தற்போது விலகியுள்ளார். 

    • உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
    • உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

    தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் "செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார்.

    இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 7 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பில் ஹிந்தி, உருது மொழி இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவிமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்குச் செம்மொழி இலக்கிய விருது ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

    இந்தப் பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.

    உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. உருது மொழியின் பல பிரபல முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளனர். எடுத்துக்காட்டாக பிரேம்சந்த் உடைய கதைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது பிராக் கவுரக்பூரி உடைய கஸல்களும் மிகவும் பிரபலமானதாக உள்ளது

    இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வரும் வரை சுமார் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்களின் ஆட்சி மொழி. பாரசீக மொழி அதனோடு அரபு மொழி கலந்து அதுவே காலப்போக்கில் உருது மொழியாக உருவெடுத்தது.

    ஹிந்தி மொழிக்கும் உருது மொழிக்கும் உள்ள வித்தியாசம், ஹிந்தி மொழி பாரசீக மொழியோடு சமஸ்கிருதத்தை கலந்ததாக இருக்கிறது, உருதுமொழி பாரசீக மொழியோடு அரபி மொழி கலந்ததாக இருக்கிறது.

    உருது மொழி பாரசீக மற்றும் அரபி இலக்கணம் மற்றும் எழுத்து வடிவங்களைக் கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுத்து வடிவத்தை இலக்கணத்தைக் கொண்டது.

    இந்தியா முழுவதும் உள்ள மக்களால் பேசப்படும் மொழிகளில் உருது மொழி ஐந்தாவது பெரிய மொழியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஹிந்தி திரைப்படங்களில் உள்ள வசனங்கள் மட்டுமே ஹிந்தி மொழியில் இருக்கிறது, பாடல்கள் அனைத்தும் உருது மொழியிலேயே அமைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை இந்துஸ்தானி இசை, கஜல் இசை, கவாலி இசை போன்ற இசைகள் உருது மொழியினால் தான் உருவாகியிருக்கிறது.

    இந்திய ரூபாய் நோட்டுகளில் உருது மொழி இடம் பெற்று இருப்பதும் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அரசின் அதிகாரப் பூர்வமான மொழியாகவே உருது மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே உருது மொழியின் தனிச் சிறப்புத் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.
    • சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    அவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி பிரச்சனை எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நாளை பேசலாம். இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அவர்கள் கடும் கூச்சலிட்டனர்.

    சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள்.
    • பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாகி உள்ள பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தையும் இப்போதே முடுக்கி விட்டுள்ளது.

    இதன்படி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள். இதன் பிறகு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள். அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி ஒன்றாக கையை உயர்த்தி காண்பிக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பலத்தை காட்டவும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

    அந்த பகுதி முழுவதுமே மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை இந்த தண்ணீர் திறப்பு இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன் படி இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.67 அடியாக குறைந்து காணப்பட்டது.

    அணைக்கு வெறும் 11 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 59.37 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
    • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.

    அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.

    * பிரதமர் மோடி பங்கேற்கும் நாளைய பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

    * தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.

    * மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    * அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.

    * தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.

    அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.

    * தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை.

    * உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    * உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.

    * உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    * அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
    • வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று சட்டசபையில் இரங்கல் குறிப்புகளையும், இரங்கல் தீர்மானங்களையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்ற செகதீசன், சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முதுபெரும் அரசியல் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) பொன்னுசாமி ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன. நேற்று 8 நிமிடங்கள் மட்டுமே சட்டசபை அலுவல்கள் நடந்தன.

    இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    • நேற்று தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டு மக்களுக்கு 'ஷாக்' கொடுத்து வருகிறது. அதிலும் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக எகிறுகிறது. கடந்த 13-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.

    விலையை கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு கடந்த 3 தினங்களாக அதன் ஏற்றம் படுவேகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை காலை மற்றும் பிற்பகல் என 2 முறை மாற்றம் கண்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.515-ம், சவரனுக்கு ரூ.4,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 80-ம் உயர்ந்தது.

    இது ஒரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்த, வெள்ளி விலையும் மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவும் விண்ணை முட்டும் அளவுக்கு எகிறுகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-1-2026- ஒரு கிராம் ரூ.345

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    • பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க. இணைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி தலைவர்கள் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.

    இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு வருகை புரிந்தார்.

    அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கிறார்.

    இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில்,

    தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

    நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் என்பது தமிழகத்தினுடைய ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற கூட்டமாக இருக்கும்.

    காலை உணவு முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உங்களை சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.

    • குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
    • ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து இயக்கம்.

    சென்னை:

    பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கடந்த 7-ந்தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×