என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பேசிய அந்த மாணவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் ஒருவர் பட்டம் வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை. முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெற்று தான் இந்த பட்டப்படிப்பை நான் முடித்தேன். அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் படத்தை இணைத்து ஆளுநரின் கையில் பட்டம் வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- விருப்ப மனு வினியோகிக்கப்படும் என த.வெ.க. கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் முதல் முறையாக களமிறங்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படும் என த.வெ.க. கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விருப்ப மனு வினியோகம் செய்யப்பட உள்ளது. கட்சியினர் விருப்ப மனுக்களை தலைமை நிலைய செயலகத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம்.
- கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
- தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.
சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதுதான் இறுதியான அறிவிப்பு.
* கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
* வெகு விரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம்.
* இன்று கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
* இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை.
* தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.
* மற்றவர்கள் பேசினால் பேச்சுவார்த்தை, தே.மு.தி.க. பேசினால் தனிப்பெயரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.
- நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிதர்சனமான உண்மையான போட்டியே அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான். விஜயை கண்சிடரே பண்ண மாட்டார்கள்.
விஜய் நானும் ரவுடி தான்... என்னை ஜீப்பில் ஏற்றுங்கள் என்றால் எப்படி முடியும்.
கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி, ஈவு இரக்கம் இல்லாமல் கட்சியின் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடுகிறார் விஜய். அந்த குடும்பங்கள் எவ்வளவு மனம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
த.வெ.க. தலைவராக இருக்க விஜய்க்கு அருகதை இல்லை. லாட்டரி பணத்தில்தான் அரசியல் கட்சி நடத்துகிறார்.
எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான் போட்டி. அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.
பிரதமர் வந்தார். அவருடைய கட்சிக்காரர்கள் அவரை பூஸ்ட் பண்ண சொல்லலாம்.
நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
எங்களுக்கு எல்லாம் கீழே தான். எங்களுக்கு யாரும் மேலே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மும்ரமாக ஈடுபட்டு உள்ளன. அதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 12,582 ஊராட்சிகள் மற்றும் 16 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சி தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் மாநில அளவிலான அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 30-40 நாட்களுக்கு இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் கி.மீ. வரை வாகனங்களில் சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது. இதற்கான பணிகளில் அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். மேலும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.
ஒரு பிரசார வாகனம் தயாரிக்க 20 முதல் 40 நாட்கள் வரை ஆகும் என்பதால் இப்போதே பல்வேறு கட்சிகள் சார்பில் வாகனங்கள் முன்கூட்டியே கொண்டுவந்து விடப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் அங்கு பிரிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்ப பிரத்தியேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வாகனத்தின் உட்புற கட்டமைப்புகள், தலைவர்கள் அமரும் வசதி, ஹைட்ராலிக் ஏணி மூலம் வாகனத்தின் மேல் வந்து உரையாற்றும் வசதி, வாகனத்தில் இருந்தபடி வெளியில் உள்ள கூட்டங்களை கண்காணிப்பதற்காக அகன்ற டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன.
மேலும் அந்த வாகனத்திற்குள் தலைவருடன் 3-5 நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் அமர வசதியாக குஷன் இருக்கைகள், படுக்கை வசதி, போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல ஒருசில பிரசார வாகனங்களில் சமைப்பதற்கான பேன்ட்ரி யார்டு மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்படுகின்றன. தேர்தல் பிரசார வாகனத்திற்கு உள்ளேயே "பேக்ஸ், பிரிண்டர் எந்திர வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
தேர்தல் பிரசார வாகனங்களில் தலைவர்கள், நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் குண்டும் குழியுமான ரோடுகளில் "அலுங்காமல் குலுங்காமல்" செல்லும் வகையில் "ஏர் சஸ்பென்ஷன்" வசதி செய்யப்படுகிறது.
அதேபோல பெண் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்துவதற்கான பிரசார வாகனங்களும் மும்முரமாக தயாராகின்றன. இந்த வாகனங்களில் கழிப்பறை, உடை அலங்கார பகுதி போன்ற சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டியது உள்ளது. எனவே ஆர்டர் செய்யும்போதே பெண் தலைவர்களுக்கான வாகனமா என்று கேட்டு அதற்கேற்ப சொகுசு வசதியுடன் பிரசார வாகன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
தேர்தல் சுற்றுப்பயணத்தில் பிரசார வாகனங்கள் மிகவும் முக்கியமானவை என்று தனியார் நிறுவன உரிமையாளர் ரியாஸ் கூறுகிறார், இவர் மேற்கண்ட பணிகளில் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது தந்தை காலத்தில் தொடங்கி தற்போது வரை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு தேர்தல் பிரசார வாகனங்களை செய்து வழங்கி வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் தேர்தல் பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு கட்சிகளும் அவரவர் வசதிக்கு ஏற்ப வாகனத்தில் வசதிகளை செய்து தர கூறுவார்கள். அவற்றை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பிரசார வாகனத்தில் தலைவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது, சாலையில் செல்லும்போது வாகனம் குலுங்க கூடாது என்பதுதான். ஏனெனில் சில தலைவர்கள் 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியது உள்ளது.
மேலும் அந்த வாகனத்தில் உள்ள ஆடியோ வசதி மற்றும் போகஸ் விளக்குகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் கேமிரா வசதிகள் மற்றும் வாகனம் பழுது ஏற்படாமல் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். பிரசார வாகனத்திற்கு உள்ளே இருபுறமும், ஏ.சி. வசதி செய்து கொடுப்போம்.
நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் வாகனங்களை மிகச் சிறப்பாக தயார் செய்து கொடுத்து வருகிறோம். அதேபோல தற்போது "கேரவன்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. சுற்றுலா செல்பவர்கள், வசதியானவர்கள் வெளியில் செல்வதற்கு கேரவன் போன்ற வசதி நிறைந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் அனைத்து வசதிகளுடன கூடிய சொகுசு வாகனங்களின் தேவை தற்போது பொதுவாகவே அதிகரித்து வருகிறது.
பிரசார வாகனம் தயாரானதும் அந்தந்த கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடிகள், சட்டசபை தேர்தலுக்கு அந்த கட்சி அறிவித்திருக்கும் கொள்கை லோகோ ஆகியவையும் பிரசார வாகனத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டு இறுதி வடிவம் பெற்று சம்பந்தப்பட்ட அரசியல் பிரபலங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றார்.
- வியாபார யுக்தியில் வித்தியாசமாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
- அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இந்த விசில் விற்பனை சூடுபிடித்து வருகிறது.
நடிகர் விஜய்யின் த.வெ.க.விற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலம் ஆகிறதோ அது அரசியல்! ஆனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. சாதாரணமாக ஒரு விசில் என்பது பிளாஸ்டிக் மற்றும் மெட்டலை பொறுத்து 10 ரூபாய் முதல் ரூ.25 வரை சாதாரண கடைகளில் கிடைப்பது தான். ஆனால் இப்போது இதை வியாபார யுக்தியில் வித்தியாசமாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இளைய தலைமுறையிடம் விஜய் மோகம் அதிகமாகவே இருக்கிறது. அவர்களை குறிவைத்து தான் இந்த விசில் வியாபரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் கொடி நிறத்துடன் விசிலை வடிவமைத்து விற்கிறார்கள். குறிப்பாக அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இந்த விசில் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

6 விசில்கள் அடங்கிய ஒரு பாக்கெட் விலை ரூ.150 முதல் 380 வரை விற்கப்படுகிறது. 'வோட் பார் விஜய்' என்ற எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு விசில்களின் விலை ரூ.280. எப்படியோ அரசியல் தலைவர்கள் அரசியலில் சாதித்தாலும் சரி வியாபார யுக்தியில் வியாபாரிகள் சாதிக்கிறார்கள்.
- நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாக தெரிவித்தார்.
- தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் அமைக்கப்பட்டு இருந்த தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை நியமித்து இருந்தது.
இந்த நிலையில், கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும் என்றார்.
- ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைத்தார்.
கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையம், நியாய விலைக்கடைகளை அவர் திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
- 'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர்.
- அண்ணா வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர். கொள்கை அரசியலையும் மக்களுக்கான நடைமுறை தீர்வுகளையும் கற்றுத் தேர்ந்து, 'இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சியும் மாநிலத்தின் ஆட்சியை அமைக்கலாம், ஒரு சாமானிய மனிதனும் அதிகாரத்தை அடையலாம்' என்ற ஜனநாயக புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்.
தமிழ்நாட்டின் தலைமகன், மாநில சுயாட்சியின் உரிமை முழக்கம், மக்கள்நல அரசியலின் நாயகர், ஜனநாயக-தேர்தல் அரசியலின் வழிகாட்டி மற்றும் தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம். அவர் வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவீதத்திலிருந்து இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
- எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒரு பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது.
திருச்சி:
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
இன்று மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். எங்களது உறுதிமொழியாக 2026 ல் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.
இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல் கருத்து கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றார்.
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது, அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறோம் என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அந்த பணிகளை நாங்கள் செய்வோம்.
இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவீதத்திலிருந்து இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 16ஆவது நிதி குழுவிலாவது அதை சரி செய்யப்படும் என நினைத்தோம் ஆனால் இந்த பட்ஜெட்டிலும் 41 சதவீதமே தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக அந்த 41 சதவீதத்தையும் பிரித்து தரும்பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான் கிடைக்கிறது. இவ்வாறு குறைத்து கொடுத்தால் திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்.
நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல் குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயை பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை சிறப்பாக செயல்பட்ட ஜல்ஜீவன் மிஷின் சார்பாக 3112 கோடிகளை வழங்காமலும், திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட்?
விவசாயிகளாக இருந்தாலும், ஏழை எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒரு பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
- அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.
- இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
- கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திருப்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.
திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,
அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,
இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.
திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-
இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-
திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-
திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.
அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






