என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-11-2025- ஒரு கிராம் ரூ.173

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    15-11-2025- ஒரு கிராம் ரூ.175

    14-11-2025- ஒரு கிராம் ரூ.180

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    • லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
    • அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த 14-ந்தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இந்த நிலையில் கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாமல் அவருடைய மகள்கள் லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17), மகன் அபினேஷ் (13) ஆகியோர் பரிதவித்தனர். அவர்கள் குடும்ப வறுமையை கண்டு கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதி சடங்கை செய்தனர்.

    நெஞ்சை உருக்கும் இந்த செய்தி பத்திரிகையில் நேற்று வெளியானது. இந்த செய்தி பலரது மனதை கலங்கடிக்க செய்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த செய்தியை படித்து பார்த்து கலங்கி உள்ளார். உடனே அவர், கமலக்கண்ணின் மூத்த மகள் லாவண்யாவிடம் செல்போனில் உருக்கமாக பேசி ஆறுதல் கூறி தன்னம்பிக்கை அளித்தார்.

    மாணவி லாவண்யாவுக்கு செல்போனில் ஆறுதல் கூறிய உரையாடலை சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்த செய்தியை 'தினத்தந்தி'யில் படித்ததுமே, மாவட்ட கலெக்டரை அழைத்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் அவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ரீனா ஐ.டி. படித்து இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை விரும்புகிறார். ரிஷிகா 10-வதோடு இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை தொடர விரும்புகிறார். அபினேஷ் படிக்க விரும்புகிறார்.

    மாவட்ட ஆட்சியரும் நானும் ஆலோசனை நடத்தி, ரிஷிகாவையும், அபினேஷையும் அன்புக்கரங்கள் திட்டத்தில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம். ரீனா ஐ.டி. படிப்பை தொடருவார்.

    அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு நிரந்தர பணி ஏற்பாடு செய்யப்படும். அரசு சார்பாக இந்த பணிகளை செய்துள்ளோம்.

    அந்த குடும்பத்தினரின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் பொருளாதார உதவி அளித்துள்ளோம்.

    இந்த குடும்பத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆலோசனைப்படி அரசு சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்வோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 23-ந் தேதி அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) வருகிற 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைதொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
    • வடமாநிலங்களில் ஆதாரில் ‘இனிசியல்’ போட மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் அதில் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே அதில் 'லாகின்' செய்ய முடிகிறது. செல்போன் எண் இல்லாதவர்கள், புதிதாக மனு செய்ய வேண்டி இருக்கிறது. பின்னர் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் 'ஓ.டி.பி.' அங்கீகாரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு உங்களது பெயர் சரியாக இல்லை என்றே வருகிறது.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் 'இனிசியல்' அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய 'இனிசியல்' சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது.

    வடமாநிலங்களில் ஆதாரில் 'இனிசியல்' போட மாட்டார்கள். தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும். அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அதேபோலதான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும்.

    எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. மேலும் கனமழை பெய்து வருவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னையிலும் லேசான மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்றுநாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • Electors Help Desk செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் 18.11.2025 முதல் 25.11.2025 வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் இதை அறிவித்துள்ளார். 

    கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காரைக்கால் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இதனால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் மோந்தா புயலால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் புதுவையின் சங்கரா பரணி, தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    புதுவையில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பின. ஏரி, குளங்களிலும் மழைநீர் தேங்கி நிரம்பியது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 2 நாட்களாக புதுவையில் தொடர் மழை பெய்து வந்தது.

    இன்று அதிகாலை முதல் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. வானம் இருண்டு வெளிச்சம் இல்லாமல் உள்ளது.

    அதேநேரத்தில் காரைக்காலில் கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது இல்லை.

    செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழும், நல்ல முடிவாக இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது இல்லை.

    அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக கடந்த 7-ந் தேதி கூறியிருந்த நிலையில் இந்த பதிலை கூறினார்.

    தவெக கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளீர்களா என்ற கேள்வி தற்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல இயலாது என கூறினார்.

    • தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
    • சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அப்போது ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தவெக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 45 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என கூறினார்.

    ×