கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் ஏரிக்கரை பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நியாய விலைக்கடைகளை முதலமைச்சர் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் ஏரிக்கரை பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை:

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இம்மையத்தின் தரைத் தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலைக் கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலைக் கடை என 6 நியாய விலைக் கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்.

முதல் தளத்தில் பிசியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற்சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;

2-ம் தளத்தில் செயற்கை மூட்டு (கை,கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;

3-ம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான 15 படுக்கை வசதிகள், மின் தூக்கி மற்றும் கழிப்பறைகள்;

4-ம் தளத்தில் மருத்துவ ஆலோசனை அறைகள், நோயாளிகள் காத்திருப்பு அறை, பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அருந்தும் இடம், மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 6 நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இப்பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுகாப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com