search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில்பாலாஜியை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    செந்தில்பாலாஜியை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார்.
    • அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    கடந்த 2011-2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சொன்னபடி வேலை வழங்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதன் காரணமாக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் அப்போது பறிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்ட புகார் அப்படியே இருந்தது. கோர்ட்டிலும் அவர் மீதான வழக்கு இருந்தது. அப்போது 2016-ம் ஆண்டு கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

    அந்த தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அ.ம.மு.க.வுக்கு சென்று அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்து இப்போது தி.மு.க.வில் அமைச்சராகவும் உள்ளார்.

    ஆனாலும் அவர் மீதான வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

    ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், மாவட்டச் செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி எம்.கே.அசோக், கே.பி.கந்தன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளரும் 193-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், கழக மாணவரணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி,

    இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவராஜ், பேரவை துணைச் செயலாளர் வேளச்சேரி மூர்த்தி, பகுதி செயலாளர்கள் எ.எம்.காமராஜ், ஜி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம்.சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வக்கீல் சதாசிவம், மார்க்கெட் சுரேஷ், வைகுண்ட ராஜா, ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், மாணவரணி போயஸ்கார்டன் எம்.ராமலிங்கம், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி வழக்கறிஞர் பாபு முருகவேல், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, மாநில சிறுபான்மை ஆணைய முன்னாள் துணைத் தலைவரான கழக செய்தி தொடர்பாளர் வீர ஜவஹர் அலி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட்டில் மாவட்ட செயலாளர் வி.சோம சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், நிர்வாகிகள் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், வி.பாலாஜி, வாலாஜாபாத் அரிகுமார், ஜெயராஜ், திலக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர்கள் சிட்டலப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் டி.கே.எம்.சின்னையா, மாநில மகளிர் அணி இணை செயலாளர்கள் மரகதம் குமர வேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், தண்டரை கே.மனோகரன், கே.என்.ராமச்சந்திரன், தனபால், ப. தன்சிங், பூவராகவமூர்த்தி, அனகை ராஜாதுரைபாபு, வேலாயுதம், விஜயசங்கர், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.அரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், சிற்றம் சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மதுரவாயல் வடக்குபகுதி செயலாளர் என்.எம். இமானுவேல், அம்மாபேரவை பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×