search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா- பிரதமர் மோடி
    X
    அமித்ஷா- பிரதமர் மோடி

    மோடியின் கண் அசைவில் அமித்ஷா நடத்திய அரசியல் சதுரங்கம்

    மகாராஷ்டிராவில் நேற்று நடந்த அரசியல் திருப்பத்துக்கு முழுக்க, முழுக்க பிரதமர் மோடியும், கட்சி தலைவர் அமித்ஷாவுமே காரணமாக இருந்தார்கள். இது பட்னாவிசுக்கேகூட தெரியாது.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் நேற்று நடந்த அரசியல் திருப்பத்துக்கு முழுக்க, முழுக்க பிரதமர் மோடியும், கட்சி தலைவர் அமித்ஷாவுமே காரணமாக இருந்தார்கள். கட்சி மேலிடம் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா தலைவர்களுக்கு கூட தெரியாது.

    முதல்-மந்திரி பட்னாவிசுக்கே தெரியாமல் தான் எல்லா ரகசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    பிரதமர் மோடி வகுத்து கொடுத்த திட்டத்தின்படி கட்சி தலைவர் அமித்ஷா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித்பவாரை இழுப்பதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதை அமல்படுத்தும் பணியை அமித்ஷா ரகசியமாக செய்தார்.

    நேற்று முன்தினம் மாலை அஜித்பவாருடன் டெல்லியில் இருந்து தொடர்பு கொண்டார்கள். அப்போதுதான் அஜித்பவாரின் மனம் மாற தொடங்கியது. அவருக்கு பல்வேறு உத்தரவாதங்கள் பா.ஜ.க. மேலிடத்தில் இருந்து அளிக்கப்பட்டன.

    எனவே, பா.ஜ.க. ஆட்டுவித்தது போல் ஆடுவதற்கு அஜித்பவர் தயாரானார். உடனே அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறின.

    அமித்ஷாவின் தளபதி போல் செயல்படும் பாரதீய ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் டெல்லியில் இருந்து மும்பைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

    மும்பை வந்த அவர் அஜித்பவாருடன் தொடர்பில் இருந்தார். அமித்ஷாவின் உத்தரவுகளை பூபேந்திர யாதவ் செயல்படுத்த தொடங்கினார். அஜித் பவாரின் முழு சம்மதமும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காலையிலேயே பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு அடுத்தகட்ட ஏற்பாடுகள் நடந்தன.

    அப்போதுதான் பட்னாவிசுக்கே இந்த வி‌ஷயத்தை சொன்னார்கள். இரவு 11.45 மணியளவில் பட்னாவிசிடம் தகவல் தெரிவித்து காலையில் பதவி ஏற்க சொல்லப்பட்டது.

    அதுவரை கவர்னருக்கு கூட வி‌ஷயத்தை சொல்ல வில்லை. நள்ளிரவு 2 மணிக்கு கவர்னரிடம் தகவல் சொல்லப்பட்டது.

    டெல்லியில் நடக்கும் கவர்னர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காலையில் கவர்னர் டெல்லி செல்வதாக இருந்தது. அவரை டெல்லி வர வேண்டாம் மும்பையிலேயே இருங்கள். காலையில் பதவி ஏற்பு விழா நடத்த வேண்டும் என்று கூறினார்கள். உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய சிபாரிசு செய்யும்படியும் கூறப்பட்டது.

    பட்னாவிஸ்

    அதன்படி கவர்னர் உடனடியாக சிபாரிசு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமர் மோடி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி அமலை விலக்கிக்கொள்ளும்படி ஜனாதிபதிக்கு அதிகாலையில் கடிதம் அனுப்பினார். 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து அறிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதிகாலையிலேயே பதவி ஏற்பு விழா பணிகளை கவர்னர் மாளிகை அதிகாரிகள் வேக வேகமாக செய்தார்கள். 7.30 மணியளவில் பட்னாவிஸ்- அஜித் பவார் பதவி ஏற்றனர்.

    Next Story
    ×