என் மலர்
விழுப்புரம்
- திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
- ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறி இருப்பதாவது:-
திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால் பொது மக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பொது மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளையும் மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பா.ம.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்தே அந்த கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நேற்று இரவு 7.45 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற சி.வி. சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்.
சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக இந்த சந்திப்பின்போது டாக்டர் ராமதாசிடம், சி.வி. சண்முகம் கூறி இருப்பதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கு திரைமறைவிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது என்னென்ன விவரங்கள் பேசப்பட்டன? என்பது பற்றி இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக 2 கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்து உள்ளன.
டாக்டர் ராமதாசுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமியே அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்றால் பா.ம.க.வுக்கு 12 தொகுதிகள் வரையில் தர வேண்டும் என்று அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ 7 இடங்களை தருவதாக கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பா.ம.க.வுக்கு பாரதிய ஜனதா தருவதாக உறுதி அளித்திருக்கும் 7 தொகுதிகளைவிட கூடுதலாக 2 தொகுதிகளை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் பா.ம.க.வை தங்களது அணியில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தி.மு.க. அணியை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதே அ.தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது.
கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியிலேயே இடம் பெற்றிருந்தது. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க.வை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலன் கிடைக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
- தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.
அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.
இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.
எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.
ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.
தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.
தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.
இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
சின்னசேலம்:
நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.
இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
- கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
விழுப்புரம்:
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தி என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
* கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்.
* பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
* கூட்டணி குறித்து பா.ம.க. நிறுவனர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
- 2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை (மாதிரி வேளாண் பட்ஜெட்) அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த அறிக்கையில் 60 ஆயிரம் கோடி வேளாண் துறை மூலமாகவும், ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசனத்துறை மூலமாகவும் செலவிடப்படும். இதில் ரூ.12,500 கோடி விவசாயிகள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்படும். பயிர் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும் வகையில் மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
சாகுபடி பரப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 15 ஆயிரம் ஏரிகளில் சாத்தியமானவை மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600-ல் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகள் 400 ஆக உயர்த்தப்படும். வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும். காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியை போக்க நடைபெறும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். ஆறுகளில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
சேலத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியமும் உருவாக்கப்படும்.
பாலாறு நீர்ப்பாசனத் திட்டம், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணையாறு-துரிஞ்சலாறு இணைப்பு திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்படும். வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை என 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
கோயம்பேடு சந்தைபோல அனைத்து மாநகரங்களிலும் தோட்டக்கலை பொருட்களுக்கான சந்தைகள் அமைக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்பு சத்து குறைந்த முயல்கறியை பிரபலப்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகளின் பயன்பாடு குறைக்கப்படும்.
வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல், தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, உணவு தன்னிறைவு, ஊரக பொருளாதார மறு மலர்ச்சிக்கான மும்முனை திட்டம் போன்றவைகள் உருவாக்கி நிறைவேற்றப்படும் என்பன போன்ற 110 அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
- செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன.
- டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செஞ்சி:
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 30 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாமென கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன. தினமும் 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் மூட்டைகள் வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்றைய விற்பனைக்காக நேற்று மதியத்தில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரத்தொடங்கினர். நேற்று இரவு வரை சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இரவு 8.00 மணிக்கு மேல் வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாததால், விற்பனை கூடத்துக்கு வெளியே டிராக்டர் மற்றும் வாகனங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே ஆள்பற்றாக்குறையால் திணறும் கமிட்டி நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. தற்காலிகமாக கூடுதலான ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள முப்பதாயிரம் மூட்டைகள் விற்பனையாவதற்கு 2 நாட்களுக்கு மேலாகும். இதனால் விவசாயிகள் 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் எனவும், நாளை மறுநாள் புதன்கிழமை அன்று நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதும் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
- ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.
அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.
திண்டிவனம்:
திண்டிவனம்-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அ.ம.மு.க. கட்சி கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.
கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்றும் அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
- வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கள்ளக்குறிச்சியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். திண்டிவனத்தில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
இது குறித்து அவர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திண்டிவனம் விரைந்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் சரவணன் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் அடிக்கடி கொள்ளை மற்றும் திருட்டு நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகள் தரமானதாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கட்டிடமில்லாமல் திறந்த வெளியிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடம் முன்பு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மட்டுமே வைக்க கூடிய நிலை உள்ளது. அதிகமாக வரும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில்தான் வைக்க வேண்டும். அப்போது மழை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தற்போது சீசன் என்பதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருந்தது.
இந்நிலையில் 500 லாட் நெல் மூட்டைகளாக 14, 1474 நெல் மூட்டைகளும் நேற்று 700 லாட்டுகளாக சுமார் 16,000 நெல் மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சி கமிட்டியில் எடைப்பணி தொழிலாளர்கள் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் லாரி மூட்டை ஏற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் வரும்போது கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே நெல் மூட்டைகள் நேற்று முன்தினமும் நேற்றும் கொள்முதல் செய்யப்பட்டன. அவைகள் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டனர். நேற்று வந்த நெல் மூட்டைகள் நேற்று மாலை மற்றும் இன்று கொள்முதல் செய்யப்படுகிறது. அவை சுமார் 3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதாலும் மற்ற நான்கு நாட்கள் விடுமுறையா இருப்பதாலும் விவசாயிகள் இனி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் திங்கட்கிழமை நடைபெறும் கொள்முதலுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் போதும் என்று கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிட்டியின் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தை மாதமும் சீசன் டைம் என்பதால் சுமார் 15 நாட்களுக்கு இவ்வாறு அதிக அளவில் நெல்மூட்டைகள் வரும் என்றும், மற்ற நாட்களில் சாதாரணமாக இருக்கும் என்றும் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
விழுப்புரம்:
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.






