என் மலர்
விழுப்புரம்
- ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார்.
- நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாசை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார். நிகழ்ச்சி முடித்து அங்கிருந்த கிளம்பிய சி.வி. சண்முகத்திடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்று கூறிய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.
- சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.
செஞ்சி:
சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
- பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.
- நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திண்டிவனம்:
சென்னை, கொளத்தூரை சேர்ந்த மாணவர் ரமேஷ் (வயது 21). இவர் சென்னையில் வேலை செய்து வந்த தனது காதலி பவித்ராஸ்ரீ (20) என்பவருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, மோட்டார் சைக்கிளை 2 பேர் வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடி மாணவர் ரமேஷ் சென்றுள்ளார்.
அவர் திரும்பி வந்து பார்த்த போது பவித்ராஸ்ரீ சாலையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். வழிப்பறி என்று மாணவர் நாடகமாடுகிறாரா? மாணவருக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதில் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை வாகனத்தின் முன்பு தள்ளி விட்டு மாணவர் கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.
இதனால் நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர்.
- ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி:
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் யுவராஜ் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்காக தனது மனைவி சத்யா (35) மகன்கள் பிரகதீஸ்வரன் (11), அரிப்பிரசாத் (7) மற்றும் உறவினர்களுடன் சென்றார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு, யுவராஜின் உறவினரான சென்னை குன்றத்துரை சேர்ந்த கலிவரதன் மகன் உத்தரகுமார் (30), அவரது மனைவி உறவினர்கள் என மொத்தம் 9 பேர் சென்னை செல்ல திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டனர். வீடு திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலி வந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டனர். இதனை தொடர்ந்து யுவராஜின் மாமியார் வீடு உள்ள கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கப்பை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் வந்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர். இதில் ஒரு சிலர் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து வந்து மேலே ஏறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மீதம் இருந்தவர்களை கிணற்றில் இருந்து மீட்டு அவர்களை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் யுவராஜின் 2 குழந்தைகளை மீட்க முடியாததால், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த பிரகதீஸ்வரன், அரிபிரசாத் ஆகியோரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், அவரது மனைவி சத்யா, உத்தரகுமார், அவரது மனைவி பொன்னி (20), மற்றும் உறவினர்களான பாஞ்சாலி (50), அம்மச்சி (50), அம்மச்சியின் மகன் ஆகாஷ் (18) ஆகிய 7 பேரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு வீடு திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது
இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.
- சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
- ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.
- போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.
கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.
அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.
- மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் பொய்யாப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 32).
இவரும் பில்லூர் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று நேற்று இரவு வீடு திரும்பினர்.
முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ற வழியிலேயே ராஜி உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிரபாகரன் இன்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது.
- மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம். 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக,
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து 3 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஸ் தாசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மேலும் ஜன.18-ந்தேதி இறுதி விசாரணையை துவங்கி 24-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.
- அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடியை ஏற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தார். அவருக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது.
இதனைக் கண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.






