என் மலர்
விழுப்புரம்
- ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு பெற வேண்டும்.
அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. சர்வாதிகாரியாக வேண்டுமென்று மோடி செயல்படுகிறார். தமிழன் தமிழன் என்று தமிழகம் வந்தால் பேசும் பிரதமர் மோடி, குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத செயலைத்தான் அவர் செய்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோதே மார்ச் 19-ந் தேதியே சபாநாயகர், என்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபராக உள்ளார். பதவிப்பிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூறியதை தொடர்ந்துதான் எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள்தான் பா.ஜனதா அரசு. அமலாக்கத்துறையை அனுப்பித்தான் பா.ஜனதாவிற்கு ரூ.2,500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று திருகல்யாணம் நடந்து வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலைவளம் காட்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
மரக்காணம்:
வானூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரவரன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை அய்யப்பன் தாங்கல் சீனிவாசபுரம் எம்.ஜி.ஆர் நகர் எட்டியப்பன் மகன் கணேஷ் என்பவர் தனக்கு சொந்தமான காரில் புதுச்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை எதற்காக எங்கிருந்து கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரிடம் எவ்வித பதிலும் இல்லை மேலும் இந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வானூர் தேர்தல் அலுவலர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
- கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், திரவுபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சந்திரசேகர் என்ற அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பொது மக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பா.ஜனதா உடன் பாமக கூட்டணி.
- இன்று காலை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.
அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பாமக திடீரென அறிவித்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்றனர். அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.
பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்க அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் உடன் தனிஅறையில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் செஞ்சி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருக்கும், செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் டீக்கடை நடத்தி வரும் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(44), மனைவி கல்பனா(36) தம்பதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இதைப்பார்த்த ராஜேந்திரன், வெங்கடேசனை வழிமறித்து மோட்டாா் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளினார். பின்னர், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதற்கு கல்பனாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் நாராயணன் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார். தலைமறைவான கல்பனாவை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு நித்யா (38) என்ற மனைவியும், கீர்த்தனா (15), தனுஸ்ரீ (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
- கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.
- திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.
திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.
இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.
பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.
தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அப்போதே திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்து திருக்கோவிலூருக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
ஏற்கனவே, விளவங்கோடு தொகுதிக்கும் விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாங்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
- இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.
- அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு.
- விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய வழக்கு மீதான விசாரணை நீதிபதி முன் வந்தது. இதில், மேலும் ஒரு முக்கிய சாட்சி , பிறழ் சாட்சியமானது.
இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.






