என் மலர்
விழுப்புரம்
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
விக்கிரவாண்டி:
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
- மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
- அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.
விக்கிரவாண்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.
இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.
பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.
அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.
போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.
சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.
தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.
பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.
நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.
எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.
- இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
- தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும்.
செஞ்சி:
செஞ்சி வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. செஞ்சி பகுதி மலைகள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும்.
வழக்கம்போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. ஆனால் கடந்த காலங்களைப்போல் ஆடுகள் அமோகமாக விற்பனையாகவில்லை மந்தமாகவே இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும். இதனால் இப்போது இந்த வார சந்தையில் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கணேசன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக விழுப்புரம் வி.சாலை பகுதியில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு பணியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
- விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரம்:
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.
இதற்காக வி.சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் வருகை தரும் வழிநெடுகிலும் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு தங்கும் அவர், மறுநாள் 6-ந் தே தி (சனிக்கிழமை) சிதம்பரம் லால்புரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
- சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பறிமுதல் சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பது தெரியவந்தது, பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.
- திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.
- தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
விழுப்புரம்:
தமிழகம்-புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி தேர்தல் பரப்புரைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வர உள்ளார். அவர் பேசுகிற பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட வந்திருந்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.என்கிற கட்சி 5, 6 ஆக உடைந்து போய் உள்ளது. இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளார் .
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே.
- பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.
மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்.
எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
- தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன் கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் எம்.எல் .ஏ. டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர மோடி நினைத்து செயல்பட்டு வருகிறார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பா.ஜனதா அரசு. அமலாக்க துறையை அனுப்பி தான் பா.ஜ.க.விற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பொன்முடி பேசினார்.






