search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி- விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
    X

    பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி- விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

    • கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.

    அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×