என் மலர்
மதுரை
- கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மதுரையில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 14-ந்தேதி அகோர முகத்துடன் தொடங்கியது. வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கோடையின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தகித்தது. வழக்கமாக வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மதுரையில் பதிவானது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் சாலைகளில் தோன்று கானல் நீரானது மக்களை அச்சப்பட வைத்தது. முதியோர்கள், குழந்தைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தை கடந்து செல்ல வசதி படைத்த பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தனர். நடுத்தர வர்க்கத்தினர் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று ஆறுதல் படுத்திக்கொண்டனர். இளநீர், தர்பூசணி, பதநீர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலை விரட்டியடித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் அங்கு மழை நீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் சாலைகளை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. புதிதாக அந்த சாலைகளை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கி காயங்களுடன் எழுந்து செல்கிறார்கள்.
மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. சாலையில் நடுவில் செல்வதை தவிர்த்த வாகன ஓட்டிகள் சாலையோரமாக தடுமாற்றத்துடன் சென்றனர்.
- இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அேத கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த ஊரைச்சேர்ந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத மாரிச்சாமி வீட்டிற்குள் சென்று அங்கு வைத்திருந்த ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை எடுத்துவந்து கண்மூடித்தனமான வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பலர் வீடுகளுக்குள் முடங்கினர். அப்போது அவரது நெருங்கிய உறவினரான உதயகுமார் (வயது 40) என்பவர் ஓடிவந்து மாரிச்சாமியை தடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பால்ரஸ் எனப்படும் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் துளைத்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
அதேபோல் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டில் வசித்து வரும் கவியரசன் என்பவரது மகன் கிஷோர் (12) என்ற சிறுவனுக்கும் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட மாரிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது.
- நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.
தல்லாகுளம்:
மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை. ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம் என்றார்.
இதனிடையே, பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய. இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
- 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதுரை:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மதுரையை சேர்ந்த இரட்டையர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வைரவன் இவர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி. இவரது மகன்கள் ராமநாதன், லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள்.
இவர்கள் இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.
- ஜிலேபி, கட்லா, சிசி உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செம்மணிபட்டி கிராமத்தில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்த பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று கரும்பாச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று கிராமத்தைச் சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து கீழவளவு கொங்கம்பட்டி சிவகங்கை மாவட்ட பகுதிகளான எஸ்.எஸ். கோட்டை சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் அங்கு கூடினர்.
கிராம முக்கியஸ்தர்கள் இன்று காலை 5 மணி அளவில் வெள்ளைத் துண்டு வீச கண்மாயை சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை, குத்தா போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். இதில் நாட்டு ரக மீன்களான ஜிலேபி, கட்லா, சிசி, கெழுத்தி கெண்டை, வீரா மீன்கள் உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.
மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீன்களை கொண்டு சென்று அதனை சமைத்து சாமிக்கு படையலிட்டு உண்டனர்.
இதனால் ஒவ்வொரு வருடமும் கண்மாய் நிரம்பி தங்கள் பகுதி விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று மீன் வாசனை கம கமவென்று அடித்தது.
- இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- ஆங்கிலம் பாடத்தில் தலா 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனைகள் படைத்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளளன.
அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாயஸ்ரீ மற்றும் மகாஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றபோதிலும், இருவரும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாயஸ்ரீ தமிழ்- 96, ஆங்கிலம்- 96, கணக்கு- 95, அறிவியல்- 95, சமூக அறிவியல்-93
மகாஸ்ரீ தமிழ்- 98, ஆங்கிலம்- 96, கணக்கு- 92, அறிவியல்- 94, சமூக அறிவியல்-95
- ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
- தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
உரிமம் நிறுத்தி வைப்பு மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை அமர்வில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஏர்.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு பரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
- தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
- அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 2022-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் தேரூர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை மறைத்து தன்னுடைய பிறப்புச் சான்றிதழை ஊராட்சி மன்ற தேர்தலில் கொடுத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இது சட்டவிரோதம். எனவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக உள்ள அமுதாராணி பட்டியல் இன சாதி சான்றிதழை ரத்து செய்து அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ சட்டங்களை பின்பற்றி கிறிஸ்தவரை திருமணம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனுதாரர் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஒருதலைபட்சமாக தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர்.
இந்தியா போன்ற ஒரு ஜனநாயக வலிமை மிக்க நாட்டின் பொதுமக்கள் பாராளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது தான் ஜனநாயகத்தின் உயிர்நாடியே இந்த நடைமுறை அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் பகடை காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறுகின்றனர். இது போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவது போன்று உள்ளது.
இந்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர் செயலர் அமுதாராணிக்கு ஆதரவாக செயல்பட்டு அறிக்கை அளித்துள்ளார். அவரது அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
அமுதா ராணி திருமண சான்றிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியது தெரியவந்துள்ளது. மனுதாரர் ஒரே நேரத்தில் இரு வேறு சலுகைகளை அனுபவிக்க இயலாது. இந்திய கிறிஸ்தவ திருமண சட்டத்தின் படி கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, பொது வேலைக்காக தன்னை இந்து என் அடையாளப்படுத்துவதே ஏற்கத்தக்கதல்ல.
ஆகவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக அமுதாராணி தேர்வு செய்யப்பட்டதை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
- தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மதுரை:
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக் கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
நேற்று திருச்சியிலும், நாளை மதுரையிலும், இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு. தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் இருப்பதால் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக் கூடிய சக்தி மக்களிடம் உள்ளது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
- திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.
இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.
அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.
மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.
மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.
- நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- இன்று அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
மதுரை:
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். ராமராயர் மண்டபத்துக்கு இரவு 12.30 மணிக்கு வந்தார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி கள்ளழகரை வரவேற்றனர்.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரங்களில் காட்சி தந்தார். இறுதியாக நேற்று காலை 8.30 மணிக்குமேல் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதார திருக்காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.
தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குமேல் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
இதையடுத்து அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.
அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார்.
- மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
- மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த விஜய், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக கூறி வந்தார்.
தற்போதைய சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழலை ஒழிக்கவும், சாதி, மத பேதங்களால் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கலாச்சாரத்தை தடுக்கவும் அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி தனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறிவந்த விஜய் மீதான அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருந்து வருகிறது.
தனது களப்பணியின் முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் மாநாட்டை நடத்திய விஜய், சமீபத்தில் பொதுக்குழுவையும் கூட்டினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது கட்சி தொடங்கிய உடனேயே எழுதப்பட்டு விட்டதாக அதன் தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்லும் வகையில், முதன் முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். பின்னர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வியூகம் வகுத்து வரும் விஜய், அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கொடைக்கானலில் நடைபெற்ற தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் வந்தார். விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த விஜய், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார்.
இந்தநிலையில் மதுரையில் அடுத்த மாதம் (ஜூன்) பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கொடைக்கானல் வருகை தந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்டி உள்ளது. எங்கள் தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகங்கள் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.
கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரலாற்று சிறப்புமிக்க அளவில் நடத்தப்பட்டது. இப்போது பூத் கமிட்டி கூட்டங்கள் கூட மாநாடு போல நடத் தப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை விட சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 250 பேர் பூத் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் தலைவர் விஜய் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
த.வெ.க. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கான அரசியல் வியூக மாநாடு மதுரையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்படுகிறது. முன்னதாக பூத் கமிட்டி மாநாடும் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சி தலைமை ரகசியமாக தயார் செய்து வருகிறது.
மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே சட்டசபை தேர்தல் பணியில் இறங்கி விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தி.மு.க.வை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கும் விஜய் அதற்கான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகிறார். முன்னதாக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜெண்டுகளையும் நியமித்து வருகிறார். மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ள விஜய், நாளை முதல்கட்டமாக டெல்டா மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டிய விஷயங்கள், அதிக அளவில் இளைஞர்களை த.வெ.க.வில் இணைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விஜய் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.






