என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை
    X

    டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை

    • மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
    • மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த விஜய், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக கூறி வந்தார்.

    தற்போதைய சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழலை ஒழிக்கவும், சாதி, மத பேதங்களால் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கலாச்சாரத்தை தடுக்கவும் அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி தனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறிவந்த விஜய் மீதான அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருந்து வருகிறது.

    தனது களப்பணியின் முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் மாநாட்டை நடத்திய விஜய், சமீபத்தில் பொதுக்குழுவையும் கூட்டினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

    அதிலும் குறிப்பாக முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது கட்சி தொடங்கிய உடனேயே எழுதப்பட்டு விட்டதாக அதன் தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்லும் வகையில், முதன் முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். பின்னர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வியூகம் வகுத்து வரும் விஜய், அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கொடைக்கானலில் நடைபெற்ற தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் வந்தார். விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த விஜய், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார்.

    இந்தநிலையில் மதுரையில் அடுத்த மாதம் (ஜூன்) பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கொடைக்கானல் வருகை தந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை மாநகர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்டி உள்ளது. எங்கள் தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகங்கள் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

    கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரலாற்று சிறப்புமிக்க அளவில் நடத்தப்பட்டது. இப்போது பூத் கமிட்டி கூட்டங்கள் கூட மாநாடு போல நடத் தப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை விட சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 250 பேர் பூத் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் தலைவர் விஜய் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

    த.வெ.க. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கான அரசியல் வியூக மாநாடு மதுரையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்படுகிறது. முன்னதாக பூத் கமிட்டி மாநாடும் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சி தலைமை ரகசியமாக தயார் செய்து வருகிறது.

    மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே சட்டசபை தேர்தல் பணியில் இறங்கி விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தி.மு.க.வை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கும் விஜய் அதற்கான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகிறார். முன்னதாக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜெண்டுகளையும் நியமித்து வருகிறார். மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ள விஜய், நாளை முதல்கட்டமாக டெல்டா மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டிய விஷயங்கள், அதிக அளவில் இளைஞர்களை த.வெ.க.வில் இணைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விஜய் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×