என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்- மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
    X

    அ.தி.மு.க. பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்- மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    • தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 2022-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் தேரூர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை மறைத்து தன்னுடைய பிறப்புச் சான்றிதழை ஊராட்சி மன்ற தேர்தலில் கொடுத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இது சட்டவிரோதம். எனவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக உள்ள அமுதாராணி பட்டியல் இன சாதி சான்றிதழை ரத்து செய்து அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ சட்டங்களை பின்பற்றி கிறிஸ்தவரை திருமணம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனுதாரர் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஒருதலைபட்சமாக தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர்.

    இந்தியா போன்ற ஒரு ஜனநாயக வலிமை மிக்க நாட்டின் பொதுமக்கள் பாராளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது தான் ஜனநாயகத்தின் உயிர்நாடியே இந்த நடைமுறை அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் பகடை காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறுகின்றனர். இது போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவது போன்று உள்ளது.

    இந்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர் செயலர் அமுதாராணிக்கு ஆதரவாக செயல்பட்டு அறிக்கை அளித்துள்ளார். அவரது அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.

    அமுதா ராணி திருமண சான்றிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியது தெரியவந்துள்ளது. மனுதாரர் ஒரே நேரத்தில் இரு வேறு சலுகைகளை அனுபவிக்க இயலாது. இந்திய கிறிஸ்தவ திருமண சட்டத்தின் படி கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, பொது வேலைக்காக தன்னை இந்து என் அடையாளப்படுத்துவதே ஏற்கத்தக்கதல்ல.

    ஆகவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக அமுதாராணி தேர்வு செய்யப்பட்டதை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×