என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்
- நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- இன்று அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
மதுரை:
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். ராமராயர் மண்டபத்துக்கு இரவு 12.30 மணிக்கு வந்தார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி கள்ளழகரை வரவேற்றனர்.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரங்களில் காட்சி தந்தார். இறுதியாக நேற்று காலை 8.30 மணிக்குமேல் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதார திருக்காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.
தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குமேல் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
இதையடுத்து அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.
அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார்.






