என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Chithirai Thiruvizha"

    • நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • இன்று அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். ராமராயர் மண்டபத்துக்கு இரவு 12.30 மணிக்கு வந்தார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி கள்ளழகரை வரவேற்றனர்.

    நள்ளிரவு 2 மணிக்கு மேல் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரங்களில் காட்சி தந்தார். இறுதியாக நேற்று காலை 8.30 மணிக்குமேல் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதார திருக்காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

    நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.

    தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குமேல் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.

    இதையடுத்து அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.

    அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார். 

    • கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
    • மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

    அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறப்பும் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது.

    வரத்து வினாடிக்கு 516 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி-சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கோடையின் தாக்கம் இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் நிலை இருந்த போதிலும் கோடை மழையும் கை கொடுத்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆறுதல் படுத்தி வருகிறது.

    மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் உள்ள நீரின் அளவு சித்திரை திருவிழாவுக்கு திறப்பதற்கு போதுமான அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், வைகை அணையில் தற்போது 2.4 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு காலம் முடியும் தருவாயில் உள்ளது.

    இதனால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கவும், கோடையில் குடிநீர் தேவைக்கும் தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாகும் என்றனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. வரத்து 493 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1543 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.60 அடி. வரத்து 71 கன அடி. இருப்பு 110.96 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடி. வரத்து 26 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 50.34 மி.கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 35.80 அடி. வரத்து 12 கன அடி. இருப்பு 34.80 மி.கன அடி.

    • பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
    • கோவில் துணை ஆணையர் நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் முத்தாய்ப்பாக மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மே 3-ந்தேதி புறப்பாடாகிறார்.

    திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்தினம் இரவு தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வது வழக்கம்.

    இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொன் சப்பரம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    இந்தச் சப்பரம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் முன்புள்ள மண்டகப்படியில் நிறுத்தப்பட்டிருந்தது. மன்னர் காலத்தில் மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட இந்த சப்பரம் பயன்பாடின்றி இருப்பதை அறிந்த பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கோவில் துணை ஆணையர் ராமசாமி நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு வருவார். இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் ஸ்தபதியை அழைத்து ஆயிரம் பொன் சப்பரத்தை செய்தார்.

    100 ஆண்டுகளுக்கு முன் இந்த சப்பரத்தில் அழகர் எழுந்தருளினார். ஆனால் காலப்போக்கில் சப்பரம் பயன்படுத்தபடவில்லை. இதன் பெருமையை அறிந்து தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டே ஆயிரம் பொன் சப்பரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்றார்.

    • மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து சரியத் தொடங்கியது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 100 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை நீர் வரத்து 418 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 53.87 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்கள் மீது புனித நீர் பீய்ச்சி அடிக்கப்படும். எனவே ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும் வகையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வருடம் தோறும் திறக்கப்படுகிறது.

    அதன்படி இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீர் திறப்பு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக அணைப்பகுதியில் உள்ள ஷட்டர், மதகு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. 28 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.58 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 11.2, தேக்கடி 10.2, கூடலூர் 5.6, சண்முகா நதி அ ணை 4.8, உத்தமபாளையம் 1.2, போடி 20.8, வைகை அணை 2.6, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 6, வீரபாண்டி 7.2, அரண்மனைப்புதூர் 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    மதுரை சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். #ChithiraiThiruvizha #LokSabhaElections2019
    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 18-ந் தேதியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 19-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    சித்திரை தேரோட்டம் நடைபெறும் அன்று தான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க மதுரை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் 314 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 141 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சிரமம் இன்றி சென்று வர மதுரை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சித்திரை திருவிழா நடைபெறும் 4 மாசி வீதிகள், எதிர்சேவை வழித்தடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. #ChithiraiThiruvizha #LokSabhaElections2019



    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. #ChithiraiThiruvizha #Vaigaidam
    ஆண்டிப்பட்டி:

    மதுரை சித்திரை திரு விழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 2 முறை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 42.67 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1176 மி. கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வருகிற 16-ந் தேதி மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 17-ந் தேதி 850 கன அடியாகவும், 18-ந் தேதி 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இதன் மூலம் அணையில் இருந்து 3 நாட்களில் 216 மி.கன அடி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அரசின் உத்தரவிற்காக பொதுப்பணித்துறையினர் காத்திருக்கின்றனர். #ChithiraiThiruvizha #Vaigaidam

    மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ParliamentElection
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டிய கடமை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

    வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கும்போது தமிழகத்தில் 3 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது சரியல்ல.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன்.

    18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.



    அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

    எடியூரப்பா பாராளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார்.

    அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பி.ஜே.பி.யின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Vaiko #ParliamentElection



    ×