என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை கள்ளழகர் திருவிழாவுக்கு வைகையில் போதுமான நீர் இருப்பு- அதிகாரிகள் தகவல்
- கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
- மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறப்பும் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது.
வரத்து வினாடிக்கு 516 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி-சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோடையின் தாக்கம் இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் நிலை இருந்த போதிலும் கோடை மழையும் கை கொடுத்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆறுதல் படுத்தி வருகிறது.
மே மாதம் 12-ந் தேதி மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் உள்ள நீரின் அளவு சித்திரை திருவிழாவுக்கு திறப்பதற்கு போதுமான அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், வைகை அணையில் தற்போது 2.4 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு காலம் முடியும் தருவாயில் உள்ளது.
இதனால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கவும், கோடையில் குடிநீர் தேவைக்கும் தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாகும் என்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. வரத்து 493 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1543 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.60 அடி. வரத்து 71 கன அடி. இருப்பு 110.96 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடி. வரத்து 26 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 50.34 மி.கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 35.80 அடி. வரத்து 12 கன அடி. இருப்பு 34.80 மி.கன அடி.






