என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.

    இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.

    • தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.
    • இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த முயற்சிகளையும் எடுக்க வில்லை.


    மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அதி.மு.க. அல்லது தி.மு.க. யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை முடிவு செய்யும்.

    தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தாங்கள் செய்தது போன்ற ஒரு போலியான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.

    தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் மீனாதேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
    • மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 அன்று வேலை நாளாக அறிவிப்பு

    மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துளளார். 

    • காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
    • நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். 

    காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.


    காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்.

    அவருக்கு கேட்ட பதவி வழங்க வேண்டும். இப்போது கேட்ட பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சி மாறி சென்று உள்ளார். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சட்டமன்ற தொகுதி வாரியாக மினி ஸ்டேடியங்களை அமைத்து வருகிறது.

    நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார். காங்கிரசில் இருப்பது தான் எங்களுக்கு பெருமை. காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வழங்கியுள்ளோம்.

    நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் கிடந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு கனவு திட்டமாகும். புதிய ரெயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    குவைத் நாட்டில் கொடுமைக்கு உள்ளாகி அங்கிருந்து கடல் வழி தப்பித்து மும்பை வந்து போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    • உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
    • அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

    கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25ம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை "ஆ" கிராமம். பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02 2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா வயது 13) த/பெ முத்துக்குமார் மற்றும் செல்வி தர்ஷினி வயது 13] த/பெ இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

    உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    • விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    குளச்சல் துறைமுகத் தெருவில் வசிக்கும் ஆண்டனி தாஸ் அல்போன்ஸ் மீன்பிடி தொழில் செய்ய குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்று பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அவரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்த் மீனவர்களை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும் அவர்கள் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிதியுதவி அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் அணி தலைவர் ஜோர்தான் உடனிருந்தார்.

    இதனிடையே பிள்ளைத்தோப்பு கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சஜிதாவின் பெற்றோரான முத்துக்குமார்- மீனாவை அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
    • காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

    இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள்.

    "பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

    அதன் பெயரில் மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.

    காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் பாயும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.
    • விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.

    சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

    இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

    விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
    • வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    குளச்சல்:

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடலில் தொடர் சூறாவளிக்காற்று எச்சரிக்கை காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய பின்பு சீராக மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில கேரை மீன்களும், ஒரு சில சுறா மீன், 2 திருக்கை மீன்களும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    ×