என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சேலையூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த கவுரிவாக்கம் சாந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி நேற்று காலை அவர் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். “நாங்கள் போலீஸ்காரர்கள். இப்பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் நகைகளை அணிந்து செல்ல வேண்டாம்” என்று எச்சரித்தனர். பின்னர் மர்ம நபர்கள் 2 பேரும் விஜயலட்சுமி அணிந்திருந்த 21 பவுன் நகையை கழற்றி பேப்பரில் மடித்து கொடுத்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    விஜயலட்சுமி வீட்டுக்கு வந்ததும் பேப்பரை பிரித்து பார்த்தார். அதில் செங்கல் துண்டுகள் இருந்தது. வாலிபர்கள் 2 பேரும் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    வீட்டில் புகுந்து பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    வேலூரை சேர்ந்தவர்கள் சக்திவேல் (27), வினோத் (25), வெஸ்லின் (30), காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் தரணிபூசன். இவர்கள் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை 17-வது தெருவில் வீடு எடுத்து தங்கி சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று காலை 10 மணியளவில் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு டிபன் சாப்பிட வெளியில் சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 4 லேப்டாப், 4 ஐ போன், ரூ.5000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ஆணவக்கொலையை தடுக்க கோரி தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தாம்பரம்:

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு சார்பில் சாதி, ஆணவ கொலையை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி கடந்த 9-ந்தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் தொடங்கியது. இதில் 120 பேர் கலந்து கொண்டு சென்னைக்கு நடந்து வந்தனர்.

    இன்று காலை தாம்பரம் பஸ் நிலையம் அருகே நடை பயண பேரணி வந்தது. அவர்களை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

    பின்னர் அவரும் நடைபயணமாக சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றார். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்னைக்கு நடந்து சென்றனர்.

    அப்போது போலீசார் அவர்களிடம் சென்னைக்கு நடைபயணமாக செல்ல அனுமதி கிடையாது. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.

    இதனால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அப்போது ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்தில் சாதி மறுத்து திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது நடக்கிறது. தீண்டாமையும் அதிகளவு உள்ளது.

    இதை ஒழிக்க தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி இந்த அமைப்பு நடைபயணம் மேற்கொண்டது. இதை விருந்தினர் மாளிகை வரை சென்று முடித்து பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

    பல கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தருகிறார்கள். ஆனால் இது போன்ற நடைபயணத்திற்கு அனுமதிக்கவில்லை.

    தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரிலேயே ஆணவக் கொலையை தடுக்க தனி சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே பலருடன் பழகியதால் காதலியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் நேற்று மதியம் பரங்கிமலையை சேர்ந்த வசந்தி (37) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நிர்வாண நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர்.

    இது தொடர்பாக அவருடன் தங்கி இருந்த சென்னை கே.கே.நகரை சேர்ந்த சுகுமாறனை (52) போலீசார் கைது செய்தனர். மாநகர பஸ்சில் தப்பி செல்ல முயன்ற அவரை கோவளம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கள்ளக்காதல் தகராறில் அவர் கத்தியால் குத்தி வசந்தியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    கொலையுண்ட வசதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதே போல் கைதான சுகுமாறன் மனைவியை பிரிந்து ஒரு மகன், மகளுடன் வசித்து வந்து இருக்கிறார்.

    கொலைகுறித்து சுகுமாறன் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    வசந்தி பணி செய்த நிறுவனத்துக்கு வேலை சம்பந்தமாக சென்ற போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    என்னிடம் மட்டும் இல்லாமல் மேலும் பலருடனும் வசந்திக்கு பழக்கம் இருந்தது. எனவே மற்றவர்களுடனான தொடர்பை துண்டித்து விடும்படி கூறினேன்.

    ஆனால் அவள், எனக்கு பணப்பிரச்சனை உள்ளது. 2 மகன்களை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி வசந்தியிடம் கொடுத்தேன். சில மாதங்களாக அவள் மற்றவர்களுடன் தொடர்பை விட்டு இருந்தாள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பழைய தொடர்பை தொடர்ந்தாள். இதனால் நான் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    இதற்காக மாமல்லபுரத்துக்கு வசந்தியை அழைத்து சென்று லாட்ஜில் தங்கினேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் கழிவறைக்கு வசந்தி சென்றாள். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவளை கொலை செய்தேன்.

    இவ்வாறு சுகுமாறன் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விடுதியில் அறை எடுத்த போது சுகுமாறன் தனது முகவரியை மாற்றி கொடுத்துள்ளார். ஆனால் தனது செல் நம்பரை மாற்றிக்கொடுக்க மறந்து விட்டார். இதனை வைத்தே போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அவர் வைத்திருந்த செல்போன் மூலம் கோவளம் அருகே சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மாநகர பஸ்சில் தப்பி சென்ற சுகுமாறனை கைது செய்தனர்.

    கைதான சுகுமாறனை இன்று திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
    வண்டலூர் மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் வாலிபர் பலியானார். பெண் போலீசுக்கு கால்கள் முறிந்தன. இந்த விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரி:

    சென்னை ஆவடி போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலதா(39). இவர் சென்னை வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பினார்.

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள ஓட்டேரி மேம்பாலத்தில் சென்றார். இவரது பின்னால் சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஎஸ்எம் கார்டன் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ரமேஷ்(43) மற்றொரு பைக்கில் சென்றார்.

    அப்போது மீஞ்சூரிலிருந்து வண்டலூர் நோக்கி மேம்பாலத்தில் தாறுமாறாக வந்த லாரி இரண்டு பைக்குகள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.



    மற்றொறு பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் போலீஸ் விஜயலதா மேம்பாலத்திலிருந்து சர்விஸ் சாலையின் கீழே விழுந்து இரண்டு கால்களை இழந்தபடி உயிருக்காக போராடினார்.

    கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய பெண் போலீஸ் ஏட்டு விஜயலதாவை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தேடிவருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கத்திலும், மேம்பாலத்திலும் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    கூடுவாஞ்சேரி அருகே ஒத்திவாக்கம் பெரிய ஏரியை தூர் வாரகோரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில், உள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி பெரிய ஒத்திவாக்கம், சின்ன ஒத்திவாக்கம், இடையர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் ஏரி நிரம்பாமல் உள்ளது.

    மேலும் ஏரியிலிருந்து மதகு வழியாக தண்ணீர் வரமுடியாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒத்திவாக்கத்தில் சமநிலையில் உள்ள பெரிய ஏரியில் தூர்வாருவதாக கூறி ஏரிக்கரையை பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், 5 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகளை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலரிந்ததும் கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம், விஏஓ உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். அப்போது அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ஏரியை தூர்வாருவதாக கூறி ஏரிக்கரையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் ஏரிக்கரையை பலப்படுத்தாமலும், சரிவர சீரமைக்காமலும் அலட்சியப்போக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏரியை ஆழப்படுத்தவோ, தூர்வாரவோ இல்லை. இதில் ஏரிக்கரையின் பக்கவாட்டில் கற்களை பதிக்கவில்லை. தற்போது மழை பெய்தால் ஏரிக்கரையில் போடப்பட்டுள்ள மண் மீண்டும் சரிந்து விழும். மேலும் மழைநீர் கலங்கள் செல்லும் வழியையும் சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதில் ஏரி சமமாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் ஊருக்குள் புகுந்து வீணாக ஓடுகிறது.

    எனவே இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஏரியை பார்வையிட்டு தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கால்வாய் கூட்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் வருவாய்த் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
    கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ.க்கள் யுவராஜ், விஜயகுமார், நெல்லையப்பன் மற்றும் அதிகாரிகள் நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக வந்த 50-க்கும் மேற்பட்ட கார்களை சிறப்பு கருவி மூலம் கண்காணித்து மடக்கினர். காரை ஓட்டியவர் மீது உடனடியாக வழக்கு பதியப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகி உள்ளது. அபராதம் கட்டாத 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்கள் விதிமுறைக்கு உட்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
    மேல்மருவத்தூரில் பயணிகளுடன் வந்த சென்னை அரசு பஸ் தீப்பிடித்தது. பயணிகளை இறக்குவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்தபோது தீப்பிடித்ததால் டிரைவரால் வண்டியை நிறுத்த முடிந்தது. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.
    மதுராந்தகம்:

    விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் வந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர். டிரைவர் நீலகண்டன் பஸ்சை ஓட்டினார்.

    காலை 7 மணி அளவில் மேல்மருவத்தூர் பஸ்நிலையத்தில் நிறுத்துவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்தார். அப்போது திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்தது.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் நீலகண்டன் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பயணிகள் கீழே இறங்கவும் எச்சரித்தார்.

    இதனால் பதட்டம் அடைந்த பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காற்றில் வேகத்தில் தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ்சின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

    பயணிகளை இறக்குவதற்காக பஸ்சை மெதுவாக ஓட்டி வந்த போது தீப்பிடித்ததால் உடனடியாக டிரைவரால் வண்டியை நிறுத்த முடிந்தது. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.

    நெடுஞ்சாலையில் வேகமாக வந்தபோது தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    பஸ்சில் தீப்பிடித்த உடன் டிரைவரும், கண்டக்டரும் சாமர்த்தியமாக பயணிகளை உஷார்படுத்தியதால் அவர்களால் தப்பிக்க முடிந்தது. அவர்களை பயணிகள் பாராட்டினர்.

    இது குறித்து பயணிகள் கூறும்போது, மேல்மருவத்தூர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதற்காக பஸ்சை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். திடீரென பஸ்சில் தீப்பிடித்தது என்று பயணிகள் கூச்சலிட்டனர். பயந்து போன அனைவரும் அதிர்ச்சியோடு கீழே இறங்கினோம். கடவுளின் அருளால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

    ஏற்கனவே அரசு பஸ்களை ஊழியர்கள் சரிவர பராமரிப்பது இல்லை என்ற குற்ச்சாட்டு உள்ளது. நெடுந்தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களை தினமும் சோதனை செய்து அனுப்ப வேண்டும். பொது மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது’ என்றனர்.

    இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஷார்ஜா சென்ற விமானம் எந்திர கோளாறால் தரையிறக்கப்பட்டதை அடுத்து 150 பயணிகள் உயிர் தப்பினர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இன்று காலை 5 மணி அளவில் ஷார்ஜா விமானம் 150 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் புறப்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.

    நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எந்திர கோளாறு விமானியால் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சாதுர்யமாக செயல்பட்டு விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து அவசரமாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. சுமார் 6.45 மணிக்கு விமானம் தரையிறங்கப்பட்டது. 150 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

    பயணிகள் அனைவரும் சென்னை மற்றும் அருகில் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் சரி செய்யப்பட்டு இன்று அல்லது நாளை காலை புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு லாரியில் மதுபாட்டில் கடத்திய மர்ம நபர்களை யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே இன்று காலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை நிறுத்தினர். உடனே லாரியில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்த போது பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது. அதனை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து மதுபாட்டிலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மதுபாட்டில்களை கடத்தி வந்தது யார்? எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நண்பருடன் பைக்கில் சென்ற போது கார் மோதி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்தவர் சுரேந்தர். ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த தோழி பிரியங்கா (20)வுடன் மோட்டார் சைக்கிளில் கோவளம் அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தார். சுரேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.ஜி.பி. அலுவலகம் அருகே வக்கீலுக்கு சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (35). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆக இருக்கிறார்.

    இன்று காலை 9 மணி அளவில் தனது மகன் மற்றும் மகளை சாந்தோமில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.

    அவர்களை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் பின்புறம் கலங்கரை விளக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கேசவன் மீது மோதினான்.

    உடனே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் அரிவாளால் கேசவனை சரமாரி வெட்டினார்கள். தலை, கழுத்து, கை மற்றும் கால்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

    இச்சம்பவம் நடைபெறும் போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் கலங்கரை விளக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் வக்கீல் கேசவனை அரிவாளால் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கேசவன் அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வக்கீல் கேசவனை வெட்டிய கும்பல் யார்? என தெரியவில்லை. இவர் இலவச சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாக ஆஜராகி வந்தார். இதனால் இவருக்கும், பல ரவுடிகளுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    மேலும் இவர்களுக்கு எதிராக வாதாடியவர்கள் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அதை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ மூலம் துப்பு துலக்கப்படுகிறது.

    இக்கொடூர சம்பவம் பட்டப்பகலில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்துள்ளது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ×