search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணவக் கொலை"

    • மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

    சென்னை பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25 - ந்தேதி வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    ரத்த காயங்களுடன் கிடந்த அந்த வாலிபரை அக்கம்பத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான வாலிபர் பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் (26) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லடையன் பேட்டையை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது.

    மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டில் கடும் கோபம் அடைந்தனர். இதனால் பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 3 பேர் பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது




    தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவன் பிரவீன் வெட்டி கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷர்மிளா மிகுந்த மன வேதனையடைந்தார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவியும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
    • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

    கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

    கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

    இவர்களது காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களது காதலை கண்டித்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். வேறு சாதியை சேர்ந்த வாலிபரை மகள் காதலிப்பதை கீர்த்தியின் தந்தை அவமானமாக கருதினார்.

    எவ்வளவு கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்திப்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    கீர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரவியது.

    காதலி இறந்த தகவல் அறிந்த கங்காதரன், பங்காருபேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
    • 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டம் பாலுபுரா அருகே உள்ள ரத்தன் பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவரது மகள் சிவானி (வயது18). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் (21) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு 2 வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் சிவானி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். காதலனை மறந்து விடும் படி கூறினார்கள். இதனால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் திடீரென மாயமானார்கள். இதுபற்றி ராதேஷ்யம் தந்தை போலீசில் புகார் செய்தார். தனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களை பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் போலீசாரின் சந்தேக பார்வை சிவானி குடும்பத்தினர் மீது திரும்பியது. போலீசார் அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மேலும் 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர். அந்த ஆறு அதிகம் முதலைகள் நிறைந்தது ஆகும். இதையடுத்து போலீ சார் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் உடல்களை முதலைகள் கடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    • இவர்களின் காதல் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
    • ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது, தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

    ×