என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஐ.டி. ஊழியர் கொலை: அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    ஐ.டி. ஊழியர் கொலை: அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்

    • தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
    • சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், நேற்று அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

    தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுர்ஜித்(24) என்பதும், அவரது தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    எனது அக்காளும், கவினும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காளுடன் அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.

    இதனிடையே எனது அக்காள் பாளையில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்ப்பதை அறிந்து கொண்டு அடிக்கடி சிகிச்சைக்காக யாரையாவது அழைத்துச்சென்று கவின் பேசி பழகி வந்தார். இதனை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    இந்நிலையில் நேற்றும் அதேபோல் ஆஸ்பத்திரிக்கு அவர் செல்வதை அறிந்து கொண்ட நான், அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர் அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷன் சுரேஷ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் தூண்டுதலாக செயல்பட்டதாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அதன்அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×