என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணவக்கொலையை தடுக்க கோரி நடைபயணம்: தடையை மீறி பேரணி நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது
    X

    ஆணவக்கொலையை தடுக்க கோரி நடைபயணம்: தடையை மீறி பேரணி நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது

    ஆணவக்கொலையை தடுக்க கோரி தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தாம்பரம்:

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு சார்பில் சாதி, ஆணவ கொலையை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி கடந்த 9-ந்தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் தொடங்கியது. இதில் 120 பேர் கலந்து கொண்டு சென்னைக்கு நடந்து வந்தனர்.

    இன்று காலை தாம்பரம் பஸ் நிலையம் அருகே நடை பயண பேரணி வந்தது. அவர்களை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

    பின்னர் அவரும் நடைபயணமாக சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றார். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்னைக்கு நடந்து சென்றனர்.

    அப்போது போலீசார் அவர்களிடம் சென்னைக்கு நடைபயணமாக செல்ல அனுமதி கிடையாது. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.

    இதனால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அப்போது ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்தில் சாதி மறுத்து திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது நடக்கிறது. தீண்டாமையும் அதிகளவு உள்ளது.

    இதை ஒழிக்க தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி இந்த அமைப்பு நடைபயணம் மேற்கொண்டது. இதை விருந்தினர் மாளிகை வரை சென்று முடித்து பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

    பல கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தருகிறார்கள். ஆனால் இது போன்ற நடைபயணத்திற்கு அனுமதிக்கவில்லை.

    தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரிலேயே ஆணவக் கொலையை தடுக்க தனி சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×