என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீசாரின் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற பொருட்களை அரசின் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள போலீசாரின் குடும்பங்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கியதைபோல இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற பொருட்களை வழங்க அரசு உத்தர விட்டது.

    அதன்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், வண்டலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய உள் கோட்டங்களில் பணிபுரியும் 1500 போலீசாரின் குடும்பங்களுக்கு இந்த இலவச பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை காஞ்சீபுரத்தில் உள்ள ஆயுதபடை போலீஸ் பிரிவில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வழங்கினார். இந்த பொருட்களை பெற்றுக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சிடைந்தனர்.
    நாளை முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க மற்றும் திருத்த சிறப்பு முகாம், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா தகவல்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்துதல் பணி குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.

    அப்போது கலெக்டர் பா.பொன்னையா கூறியதா வது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 முதல் 21 வயது கொண்ட புதிய இளம் வாக்காளர்களுக்கென வாக்காளர் பட்டியலில் சிறப்பு சேர்க்கை பணி மற்றும் திருத்த பணி நாளை முதல் ஜூலை 31-ந்தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உரிய படிவங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஜூலை 9-ந் தேதி மற்றும் 23-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள். அப்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட இறப்பு பதிவு விவரங்கள்படி நீக்கப்படும்.

    இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு தேர்தல் பிரிவு தொலைபேசி எண்.044-27238445 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன், சப்-கலெக் டர்கள் அருண்தம்புராஜ், வி.பி.ஜெயசீலன், கில்லி சந்திரசேகர், தாம்பரம் கோட்டாட்சியர் எம்.ரவிச் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜி.விமலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூரில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு உள்ளது. நேற்று மாலை கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. லாரிகள் மூலம் மதுபாட்டில்களை இறக்கினர்.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. பொது மக்களின் போராட்டத்தையடுத்து இந்த மதுக்கடை மூடப்பட்டது.

    இந்த நிலையில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள், மாணவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    மடிப்பாக்கம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாம்பரம்:

    மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசம்பட்டு அம்மன் நகரில் மதுக்கடை உள்ளது. அதே பகுதியில் கூடுதலாக 2 மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுக்கடையை மூடக்கோரி இன்று காலை பா.ம.க.வினர். திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்டச் செயலாளர் மாடம்பாக்கம் மதன், பசுமை தாயகம் ஒருங்கிணைப்பாளர் ஐ.நா.கண்ணன், பூக்கடை முனுசாமி, முருகேசன், ஆனந்தன் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பெண்கள் மதுக்கடையை மூடக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    ஆலப்பாக்கம், மதுரவாயல் மெயின் ரோட்டில் மதுக்கடை உள்ளது. இதை மூடக்கோரி பா.ம.க. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் பகுதி செயலாளர் கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சேகர், வட்ட செயலாளர் செல்வராஜ், மாநில அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுக்கடை இன்று திறக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
    காஞ்சீபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் தங்க ஜரிகையால் உருவான புதிய பட்டுச்சேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் மத்திய அரசின் காஞ்சீபுரம் நெசவாளர் சேவை மையம் மற்றும் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் இணைந்து நெசவாளர்களுக்கு மானியத்துடன் தறி உபகரணங்கள் வாங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

    சிறப்பு விருந்தினர்களாக காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் நெசவாளர் களால் நெசவு செய்யப்பட்ட காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது ‘தங்கப்பறவை’ என்னும் புதிய பட்டுச்சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இது முழுவதும் தங்கச் ஜரிகையால் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வீ.வள்ளிநாயகம் கூறியதாவது:-

    ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் தங்க ஜரிகையால் ஆன ‘தங்க பறவை’ என்ற பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 கோடி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை ரூ.4 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தமிழக கைத்தறித்துறை இணை இயக்குநரும் இச்சங்கத்தின் நிர்வாக இயக்குநருமான ஆர்.மோகன்குமார், கைத்தறித் துறை துணை இயக்குநர் டி.பெரியசாமி, நெசவாளர் சேவை மைய துணை இயக்கு நர் டி.கார்த்திகேயன், உதவி இயக்குநர் சசிகலா, வரதராஜன், மாநில கோ-ஆப்டெக்ஸ் துணைத் தலைவரும், இச்சங்கத்தின் துணைத் தலைவருமான எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் ஏ.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிக்னல் மூடப்பட்டதை கண்டித்து அனைத்துக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பஸ்நிலையம் அருகே சிக்னல் உள்ளது. முக்கிய சாலையான இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

    சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை செல்ல இந்த சிக்னலை தாண்டி ரெயில்வே கேட் வழியாக செல்லும்.

    இதேபோல கேளம்பாக்கம், நெடுங்குன்றம், சதானந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வண்டிகள் சிக்னல் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை பிடித்து தாம்பரம், சென்னை நோக்கி செல்கின்றன.

    சென்னையில் இருந்து புறப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களும் கோயம்பேடை அடுத்து நின்று செல்லும் முக்கிய பஸ் நிறுத்தமாக பெருங்களத்தூர் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    வண்டலூரில் இருந்து பெருங்களத்தூரை கடக்க சுமார் 1½ மணி நேரத்துக்கு மேல் ஆகும்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பெருங்களத்தூர் சிக்னலை போலீசார் திடீரென மூடினர். அப்பகுதியில் ‘பேரிகார்டு’ அமைத்து சாலையை அடைத்தனர்.

    வாகனங்கள் அனைத்தும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வண்டலூர் மேம்பாலத்தில் ஏறி இறங்கி வரும் வகையில் அறிவுறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். நடந்து செல்பவர்களும் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை சிக்னல் மூடப்பட்டதை கண்டித்து பெருங்களத்தூர் பஸ்நிலையம் அருகே அனைத்து கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பாரதிய ஜனதா மாவட்ட துணைத் தலைவர் பொற்றாமரை சங்கரன், அ.தி.மு.க.வை சேர்ந்த வளையாபதி, தி.மு.க.வை சேர்ந்த சங்கர் மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் பீர்க்கன்கரணை போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிக்னல் அருகே நடந்து செல்பவர் சாலையை கடக்க மட்டும் உடனடியாக வழி ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் வண்டலூர் மேம்பாலத்தில் சுற்றிவர அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    மாமல்லபுரம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது கார் மோதியதில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மாமல்லபுரம்:

    புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார், காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடம்பாடி என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் புகுந்தது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்த உஷா (வயது 38), முருகம்மாள் (35) ஆகியோர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும், காயம் அடைந்த ராமு (29) என்பவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சேலையூர் வேதாசலம் தெரு, உமா தெரு பகுதிகளில் சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் சேலையூர் வேதாசலம் நகர், உமா நகர் உள்பட சில தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக குழாய்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

    இதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க ரூ. 1 கோடியே 60 லட்சத்தை நகராட்சி ஒதுக்கியது. இதையடுத்து புதிய சாலைகள் போடப்பட்டது.

    இந்த நிலையில் சேலையூர் வேதாசலம் தெரு, உமா தெரு பகுதிகளில் சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதம் அடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் இருசக்கர வாகனத்தோடு விழுந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, ‘நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரிசெய்து புதிய சாலை போட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம்.

    ஆனால் தரமற்ற சாலை போட்டதால் 1 மாதத்தில் பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலை போடும் போது சாலை தரமாக உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆனால் அதிகாரிகள் முறையாக பணி செய்யாததால் மக்கள் பணம் வீணாகி வருகிறத. தரமான சாலையை அமைக்க வேண்டும்’ என்றனர்.

    மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் எம்.ஜி. முருகன். இவர் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 17-ந்தேதி மதியம் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு முருகன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை தொடர்பாக மண்ணிவாக்கத்தை சேர்ந்த கவாஸ்கர், மணிகண்டன், அஜித், செல்வகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த போகி கிருஷ்ணா, அவரது மகன் சுபாஷ் ஆகியோர் எம்.ஜி.முருகன் கொலையில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் கூலிப்படையை ஏவி முருகனை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போகி கிருஷ்ணாவின் உறவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதில் முருகனுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. மேலும் அவர் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்து இருந்தார். இது போகி கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

    காஞ்சீபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் பிரேம். இவர் ரங்கசாமிகுளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 19-ந் தேதி அவர் ரூ. 5 லட்சத்துடன் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென பிரேமை தாக்கி ரூ. 5 லட்சத்தை பறித்து சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட காஞ்சீபுரம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜய், கணேசன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம் அதிக அளவு பணம் கொண்டு செல்வதை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கைதான 3 பேரிடமும் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    திருப்போரூர் அருகே சிவன் கோவிலில் உள்ள மரகதலிங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளைபோன அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே இள்ளலூர் கிராமத்தில் இருந்து ஈச்சங்காடு செல்லும் சாலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது.

    இன்று காலை 6 மணியளவில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட கிராம மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று இரவு பெய்த மழையை சாதகமாக பயன்படுத்தி மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமிசிலையின் மேல் உள்ள 1 அடி உயரமுள்ள மரகதலிங்கத்தை மட்டும் திரவம் ஊற்றி பீடத்தை விட்டுவிட்டு லிங்கத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.



    கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்களது கைரேகை படாமல் இருக்க கோயில் பூட்டை உடைத்து விட்டு தாழ்பாளில் எண்ணெய் தடவியுள்ளனர். மேலும் கோயிலுக்குள் இருந்த 2 ஐம்பொன்சிலைகளை விட்டு அந்த சிறிய மரகதலிங்கத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



    காஞ்சீபுரத்திலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவராக இருந்த இந்த ஒரு அடி மரகத சிலை அகற்றப்பட்டு புதிதாக ஒருசிலை பிரதிஷ்டி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அகற்றப்பட்ட சிலை ஒருமூலையில் மற்ற பொருட்களுடன் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது கும்பாபிஷேகத்திற்கு வந்த சாமியார் ஒருவர் இந்த சிலை பல கோடி மதிப்புள்ளது. அதை பாதுகாப்பில்லாமல் ஒரு மூலையில் போட்டு வைத்துள்ளீர்கள் என கூறியதையடுத்து தான் அந்த சிலை மரகதலிங்கம் எனவும் பல கோடி மதிப்புள்ளது என தெரியவந்தது. இதையடுத்து மூலவர் பகுதியில் ஒரு பக்கத்தில் அந்த சிலையை வைத்து வழிபாடு செய்து வந்து உள்ளனர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதேபோல் இரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோவில் கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கோயில் அருகில் வசித்து வரும் பிரபாகர் பார்த்துள்ளார்.

    இதனால் அவரை 4 பேரும் தாக்க முயன்றுள்ளனர். அவரும் செங்கற்களை அந்த 4 பேர் மீது வீசி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற ஒரு மோட்டார்சைக்கிள் திருப்போரூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மர்ம கும்பல் மரகத லிங்க சிலையை கொள்ளையடிக்க பல நாட்கள் திட்டமிட்டு வந்துள்ளது தெரிய வந்தது.
    கடும் வெயிலால் காஞ்சீபுரம் மக்கள் அவதிபட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக காஞ்சீபுரத்தில் 57 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் குறைந்தபட்ச அளவாக செய்யூரில் 1 மி.மீட்டர் மழை அளவு பதிவானது.

    ×