search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பலி"

    • புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த அரிசி கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி தாட்சாயணி (48). இவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்கவரப்பட்டில் நடந்து வரும் 100 நாள் வேலைக்கு இன்று காலையில் சென்றனர். மாளிகைமேடு-கடலூர் சாலையில் சென்ற போது, மேல்குமாரமங்கலத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் எதிரில் வந்தது.

    இந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களும் கீழே விழுந்தனர். அப்போது கரும்பு லோடு ஏற்றப்பட்டிருந்த டிராக்டர் இவர்கள், 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பெண்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    இத்தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். இது அவ்வழியே சென்றவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள், டிராக்டர் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர்.

    தாயில்பட்டி:

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆடி கடைசி வெள்ளியான இன்று இருக்கன்குடி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். இதில் நேர்த்திக்கடனாக ஏராளமானோர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.

    அதேபோல் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    அவர்கள் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிவகாசியை அடுத்த சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி சாலையோரமாக நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இந்த கோர விபத்தில் பழனியம்மாள் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற சண்முகப்பிள்ளை (50) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகபிள்ளையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் முத்துராஜ் (38) பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக தாயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேரிந்த லாரி டிரைவர் லட்சுமணன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் மது போதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாரா? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்கள் லாரி மோதி பலியானது அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.
    • கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    மேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வி.எஸ்.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள்கள் விஜய லட்சுமி(வயது48), பூங்கொடி(45).

    இவர்களில் விஜய லட்சுமிக்கு திருமண மாகவில்லை. பூங்கொடிக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவர் சின்னையா மற்றும் மகன் பகவதி(23), சந்தியா(19) ஆகியோருடன் அதே ஊரில் வசித்து வந்தார்.

    விஜயலட்சுமியும், பூங்கொடியும் சமையல் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மட்டு மின்றி வெளியூர்களுக்கும் சமையல் வேலைக்காக சென்று வந்திருக்கின்றனர்.அதேபோல் நேற்று மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்திற்கு சமையல் வேலைக்காக வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல திட்டமிட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது அவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

    இதனால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர். பெண்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்ததை அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் பார்த்தனர். இருவரையும் அவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இதுகுறித்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்குவாரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. பின்பு இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சகோதரிகள் இருவரும் கல்குவாரியில் மூழ்கிய தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவே ஒத்தக்கடை பகுதிக்கு வந்தனர்.

    மேலும் ஏராளமான பொதுமக்களும் கல்குவாரியில் திரண்டனர். அவர்களின் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். ஒத்தக்கடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இந்நிலையில் கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சகோதரிகளின் உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதனை தொடர்ந்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

    நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.

    நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த திமுக அரசு தான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர்.
    • திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சக்தி(வயது 21). இவர்களது மகள் சேவா. இவருக்கு இன்று முதல் பிறந்தநாள் ஆகும். இதை கொண்டாட சக்தியின் பாட்டி ராஜேஸ்வரி (71) மற்றும் சக்தியின் தாய் கங்கம்மாள், அவரது அக்காள் ஜெயம்மாள் ஆகியோர் பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர்.

    பின்னர் அவர்களை ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர். அவர்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அந்தப் பகுதி இருட்டாக இருந்ததாலும் மேலும் வயதான ராஜேஸ்வரியும் ஜெயம்மாளும் தண்டவாளத்தில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் சென்ட்ரலில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்தது. இதனை பார்த்த சக்தி தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியையும் ஜெயம்மாளையம் காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார்.

    அப்போது அவர்கள் 3 பேர் மீதும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் சக்தி, மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரி ஆகிய 2பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ஜெயம்மாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வைகை அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் வைகை வடகரை ஆற்றங்கரை பகுதியில் பெண் பிணம் மிதந்து வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டனர். அது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் என்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது. அவரது உடலை தெப்பக்குளம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சேடப்பட்டியையடுத்த அழகு ரெட்டியா பட்டியை சேர்ந்த வீரணன் மனைவி சக்கரைத்தாய் (80). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது கனமழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    • கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும்.

    இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் இன்று இந்த கோவிலில் கியாரஸ் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்படும் கட்டு ஷியாம்ஜியை இன்று தரிசனம் செய்தால் சிறப்பானது என்று நம்பப்படுகிறது.

    இதையடுத்து இந்த கோவிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் கூடி இருந்தனர். கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர்.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் முண்டியடித்த படி கோவிலுக்குள் நுழைந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் விழுந்த போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 2 பெண்களும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கட்டு ஷியாம்ஜி கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்கள் துயரம் அடைந்த குடும்பங்கள் மீது உள்ளன' என்று கூறி உள்ளார்.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'சிகாரில் கட்டு ஷியாம்ஜி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது மிகவும் சோகமானது, துரதிருஷ்டவசமானது.

    அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    வங்காளதேசம் நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்தார் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் வெயில் தாக்கம் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 10 பெண்கள் உயிரிழந்தனர். #Bangladeshstampede
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் சட்டோக்ராம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இரும்பு தொழிற்சாலை நடத்தி வருபவர்கள் இங்குள்ள ஒரு மதரசா திடலில் ஏழை மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இங்கு இலவசமாக அளிக்கப்பட்ட சேலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வதற்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் திரண்டிருந்தனர். 

    பலர் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களில் 10 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சட்டோக்ராம் மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் ஐந்துநபர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Bangladeshstampede 
    ×