என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சேலையூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலு, டெய்லர். இவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 21). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ஹேமச்சந்திரன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஹேமச்சந்திரன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    கல்லூரியில் பேராசிரியர் என்னை குறிவைத்து பழிவாங்கி விட்டார். என்னால் படிக்க முடியவில்லை.

    இதற்கு மேலும் அம்மா உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நண்பர்களை பிரிவது கடினமாக உள்ளது. என்னுடைய முடிவுக்கு பேராசிரியர் காரணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருடி வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. இதனால் குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளன. இதன் தேவைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இதை பயன்படுத்தி மாம்பாக்கம் ஊராட்சியில் தனியார் சிலர் 6 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தினம் பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் எடுத்து தொழிற்சாலைகளுக்கும், ஓட்டல்களுக்கும் சட்ட விரோதமாக சப்ளை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    மாம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் 20 அடி, 30 அடி தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்.

    ஆனால் தற்போது அனுமதி இல்லாமல் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து நீலத்தடி நீரை திருடி விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கிறது. குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இது குறித்து வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார், கலெக்டர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலத்தடி நீர் கொள்ளை தொடர்ந்தால் மாம்பாக்கம் ஊராட்சி பாலைவனமாக மாறிவிடும். அதற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுபோல் பண்ருட்சி ஊராட்சியில் 10 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மணல் கடத்திய 10 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் திருப்புட்குழி பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் போலியான ரசீதுகள் மூலம் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து 8 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோல் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியில் மணல் கடத்திய 2 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பாலுசெட்டி சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று இரவு 10.45 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த மன்சூர் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்தது தெரிய வந்தது.

    அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது எதுவும் சிக்காததால் மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.

    மன்சூருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மாத்திரைகள் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அவருக்கு ‘இனிமா’ கொடுத்து மாத்திரைகளை வெளியேற்றினர். அதில் 38 மாத்திரைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்த போது தங்க பவுடர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தங்க கட்டிகளை பொடியாக்கி மாத்திரைகளில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. மன்சூரிடமிருந்து 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய கடலூரைச் சேர்ந்த முகமது என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடையில் 5 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிமிடருந்து 470 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று காலை அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முகைதீன், லட்சுமி, பானு ஆகியோர் நிறைய நகைகளை அணிந்து வந்தனர்.

    இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் சென்னையில் இருந்து செல்லும்போது நகைகள் எதுவும் அணிந்து செல்லவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடந்த சோதனையில் 2 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெங்களூர் பெண் என்ஜினீயர் அண்ணனுடன் வெட்டிக்கொலை தரக்குறைவாக பேசியதால் 2 பேரையும் கொன்றேன் கைதான மாமனார் வாக்குமூலம்
    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணை, சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோசலன் (65). ஆட்டோ டிரைவர். இவரது மகன் வினாயகமூர்த்தி. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வரலட்சுமிக்கும் (26) கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வினாயகமூர்த்திக்கு விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்ததாக கூறி 3 மாதத்திலேயே வரலட்சுமி பிரிந்து பெங்களூருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய வரலட்சுமி, தனது அண்ணன் கம்ப்யூட்டர் என்ஜினீயரான கோதண்டன் (30), அக்காள் பவானி (33) மற்றும் தோழி மாலதி ஆகியோருடன் நேற்று மாலை பள்ளிக்கரணையில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டில் வரலட்சுமியின் கணவர் வினாயகமூர்த்தி வீட்டில் இல்லை. மாமனார் கோசலன் மட்டும் இருந்தார்.



    அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கோசலன் அரிவாளால் ஓட, ஓட விரட்டி மருமகள் வரலட்சுமி, அவரது அண்ணன் கோதண்டன் ஆகியோரை வெட்டி கொன்றார். பவானிக்கும் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. தோழி மாலதி மட்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோசலனை கைது செய்தனர். மோதல் ஏற்பட்ட போது தள்ளி விடப்பட்டதில் கோசலனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பவானி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உள்ளார்.

    இது குறித்து கோசலன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    சமாதானம் பேச வந்த வரலட்சுமி, அவரது அண்ணன் கோதண்டன் மற்றும் குடும்பத்தினர் எனது மகன் குறித்து தரக்குறைவாக பேசினர். இதனை கண்டித்த என்னை கோதண்டன் தாக்கினார்.

    இதனால் ஆத்திரத்தில் அவர்களை அரிவாளால் வெட்டினேன். வரலட்சுமியும், கோதண்டனும் இறந்து விட்டனர். எனது ஆத்திரத்தால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 பேரை கொன்றது குறித்து கோசலன் அடிக்கடி கூறி புலம்பி வருகிறார்.

    கொலையுண்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைகாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
    பிரிந்து வாழும் கணவருடன் சேர்ந்து வாழ சென்னை வந்த பெங்களூரு பெண் என்ஜினீயர், அண்ணனுடன் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மாமனார் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகரை சேர்ந்த கோசலன் (வயது 65). ஆட்டோ டிரைவர். இவரின் மகன் வினாயகமூர்த்தி (28). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வரலட்சுமிக்கும் (26) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வினாயகமூர்த்திக்கு விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்ததால் வாழ பிடிக்காமல் 3 மாதங்களில் வரலட்சுமி பெங்களூருவில் உள்ள தன் அக்கா, அண்ணன் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வரலட்சுமி விரும்பினார். இதையடுத்து தன் அண்ணனான கம்ப்யூட்டர் என்ஜினீயர் கோதண்டன் (30), அக்கா பவானி (33) மற்றும் தன் தோழி மாலதி ஆகியோருடன் நேற்று மாலை பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள கணவர் வீட்டுக்கு வரலட்சுமி வந்தார்.

    அப்போது வீட்டில் கோசலன் இருந்தார். வரலட்சுமி, வினாயகமூர்த்தியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கோதண்டன் கூறினார். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோதண்டன், கோசலனை அடித்தார். உடனே கோசலன் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து அங்கிருந்தவர்களை வெட்ட விரட்டினார்.

    இதனால் வரலட்சுமி உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து ஓட முயன்றனர். எனினும் கோதண்டனை சரமாரியாக கோசலன் வெட்டினார். இதில் கோதண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் மருமகள் வரலட்சுமியையும் கோசலன் விரட்டி சென்று வெட்டினார்.

    அப்போது பவானி அவரை தடுக்க முயன்று தள்ளிவிட்டார். இதில் கோசலன் காயம் அடைந்தார். எனினும் பவானி, வரலட்சுமியை கோசலன் அரிவாளால் வெட்டினார். இதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி போராடி கொண்டு இருந்தார். தோழி மாலதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தந்தனர். தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அன்பு, பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கோதண்டன், வரலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு போராடிய பவானி, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோசலனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை நகருக்கு வருகிற 15-ந் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட போரூர் ஏரி நீரை சென்னை குடிநீருக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    போரூர்:

    பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு உள்ளன.

    4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 93 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4310 மில்லியன் கனஅடி இருந்தது.

    ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு தினமும் 8 ஆயிரத்து 510 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வீராணத்தில் இருந்து குழாய்கள் மூலம் நெய்வேலி நிலக்கரி சுரங்க தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இது தவிர கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும், மாங்காடு அருகே உள்ள 22 கல்குவாரியில் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது எனினும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க முடியவில்லை.

    இதையடுத்து போரூர் ஏரி தண்ணீரை சென்னை குடிநீருக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் எடுத்துள்ளது.



    இதற்காக போரூர் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வீராணம் ஏரி குழாயுடன் இணைக்கப்படுகின்றன. இந்த குழாய் இணைப்பு பணிகள் இன்னும் 10 நாளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட போரூர் ஏரி நீரை சென்னை குடிநீருக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு போரூர் ஏரி நீரை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    திருப்போரூர் சிவன் கோவிலில் இருந்த மரகத லிங்கம் கொள்ளை போனது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த இள்ளலூரில் பழமை வாய்ந்த சுயம்பீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 24-ந் தேதி கோவிலில் இருந்த சுமார் ஒரு அடி உயரமுள்ள மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்.

    இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மரகத லிங்கத்தை கொள்ளையடித்த மன்னார்குடியை சேர்ந்த அருள், உத்தண்டியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை மன்னார்குடியில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மரகதலிங்கம் மீட்கப்பட்டது.

    இந்த கொள்ளையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்படுவதற்கு முன்பு அதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது சத்தம் கேட்டு பொது மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த மோட்டார் சைக்கிளை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் துப்பு துலக்கினர். மேலும் கொள்ளை நடந்த நாளில் அங்குள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். இதனை வைத்து குற்றவாளிகளை நெருங்கியதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.
    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



    காவல்துறை டி.ஜி.பி. பணி நீட்டிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து இருக் கிறார். எதிர்க்கட்சி என்ற முறையில் சிலர் அரசியல் செய்வார்கள். எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். அது நடக்கப் போவதில்லை. அது அவருக்கே தெரியும்.

    அ.தி.மு.க. பற்றி தலைமை இல்லாத கட்சி, ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை குடும்ப அரசியல் கிடையாது. தி.மு.க. குடும்ப அரசியலை பின்பற்றுகிறது.

    அப்பா தலைவர், மு.க. ஸ்டாலின் செயல் தலைவர், அப்பா- முதல்-அமைச்சர், மகன்- துணை முதல்-அமைச்சர்.

    தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் முதல்வர் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் விருப்பத்தின்படி ஆட்சி செய்து பாராட்டையும் பெற்று இருக்கிறார்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சட்டசபை தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சட்டசபை தேர்தல் 5 ஆண்டுக்கு பிறகு தான் வரும். அதுதான் சட்டம். அ.தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. அதில் யாருடைய தலையீடும் கிடையாது.



    அமைச்சர்களுக்கு இது ஜெயலலிதா ஆட்சி, எம்.ஜி.ஆர். வளர்த்த இயக்கம் என்று நன்றாக தெரியும். அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல அமைச்சர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.

    ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தொழிற்சாலைக்கான வரிகள் இருக்கிறது.

    தற்போது ஒரே நாடு, ஒரே வரி என்பதால் மாநிலத்தில் உள்ள நிதி நிலைமை குறைந்துள்ளது. அதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளோம். 5 ஆண்டுகளுக்கும் நிதி நிலையை சரி செய்வதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

    ஜி.எஸ்.டி. வரியால் எந்த பாதிப்பு இருந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அதை மத்திய அரசுக்கு எடுத்து செல்வார்கள். ஏழை, சாதாரண மக்களுக்குத்தான் அ.தி.மு.க.



    ஜனாதிபதி தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதல்வரிடம் ஆதரவு கோரினார். அதன் அடிப்படையில் தலைமை கழகம் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்லம்பட்டிடை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெயசீலன் (வயது25).

    வீட்டின் பின் பகுதியில் எந்திரம் அமைத்து பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 19). வேலை பார்த்தார்.

    நேற்று இரவு எட்வின் ஜெயசீலனும், கிறிஸ்டோபரும் பைப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை தெரியாமல் 2 பேரும் அதில் கை வைத்தனர். இதில் மின்சாரம் பாய்ந்து எட்வின் ஜெயசீலனும், கிறிஸ்டோபரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இன்று காலை தான் அவர்கள் இறந்து கிடப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.

    சரக்கு, சேவை வரியால் தமிழக வியாபாரிகளுக்கு ஏற்படும் குறைகளை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    காஞ்சீபுரம்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வழியாக ஆரணியில் நடைபெறும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றார்.

    அதையொட்டி காஞ்சீபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வரவேற்றனர்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    சரக்கு, சேவை வரியால் தமிழக வியாபாரிகளுக்கு ஏற்படும் குறைகள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டப்படும். வரியை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் ஆரணிக்கு புறப்பட்டு சென்றார். 
    சேலையூரில் கத்தி முனையில் பெண்ணிடம் 13 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

    இவரது மனைவி பிருந்தா (35). இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.

    நேற்று காலை இவரது கணவர் பாஸ்கர் வேலைக்கு சென்று விட்டார். பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் அழைப்பு மணியை அழுத்தினார்.

    உடனே அவர் கதவை திறந்தார். அவரிடம் குடியிருப்பின் தரை தளத்தில் குழந்தைகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. எனவே உங்களை அழைத்து வரச் சொன்னார்கள் என்று கூறினான்.

    அப்போது திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 13 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.

    இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ×