என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு பெண் என்ஜினீயர் - அண்ணன் கொலை: கைதான மாமனார் வாக்குமூலம்
    X

    பெங்களூரு பெண் என்ஜினீயர் - அண்ணன் கொலை: கைதான மாமனார் வாக்குமூலம்

    பெங்களூர் பெண் என்ஜினீயர் அண்ணனுடன் வெட்டிக்கொலை தரக்குறைவாக பேசியதால் 2 பேரையும் கொன்றேன் கைதான மாமனார் வாக்குமூலம்
    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணை, சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோசலன் (65). ஆட்டோ டிரைவர். இவரது மகன் வினாயகமூர்த்தி. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வரலட்சுமிக்கும் (26) கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வினாயகமூர்த்திக்கு விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்ததாக கூறி 3 மாதத்திலேயே வரலட்சுமி பிரிந்து பெங்களூருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய வரலட்சுமி, தனது அண்ணன் கம்ப்யூட்டர் என்ஜினீயரான கோதண்டன் (30), அக்காள் பவானி (33) மற்றும் தோழி மாலதி ஆகியோருடன் நேற்று மாலை பள்ளிக்கரணையில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டில் வரலட்சுமியின் கணவர் வினாயகமூர்த்தி வீட்டில் இல்லை. மாமனார் கோசலன் மட்டும் இருந்தார்.



    அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கோசலன் அரிவாளால் ஓட, ஓட விரட்டி மருமகள் வரலட்சுமி, அவரது அண்ணன் கோதண்டன் ஆகியோரை வெட்டி கொன்றார். பவானிக்கும் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. தோழி மாலதி மட்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோசலனை கைது செய்தனர். மோதல் ஏற்பட்ட போது தள்ளி விடப்பட்டதில் கோசலனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பவானி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உள்ளார்.

    இது குறித்து கோசலன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    சமாதானம் பேச வந்த வரலட்சுமி, அவரது அண்ணன் கோதண்டன் மற்றும் குடும்பத்தினர் எனது மகன் குறித்து தரக்குறைவாக பேசினர். இதனை கண்டித்த என்னை கோதண்டன் தாக்கினார்.

    இதனால் ஆத்திரத்தில் அவர்களை அரிவாளால் வெட்டினேன். வரலட்சுமியும், கோதண்டனும் இறந்து விட்டனர். எனது ஆத்திரத்தால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 பேரை கொன்றது குறித்து கோசலன் அடிக்கடி கூறி புலம்பி வருகிறார்.

    கொலையுண்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைகாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×