என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைகிணறு அமைத்து தண்ணீர் திருட்டு
    X

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைகிணறு அமைத்து தண்ணீர் திருட்டு

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருடி வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. இதனால் குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளன. இதன் தேவைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இதை பயன்படுத்தி மாம்பாக்கம் ஊராட்சியில் தனியார் சிலர் 6 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தினம் பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் எடுத்து தொழிற்சாலைகளுக்கும், ஓட்டல்களுக்கும் சட்ட விரோதமாக சப்ளை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    மாம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் 20 அடி, 30 அடி தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்.

    ஆனால் தற்போது அனுமதி இல்லாமல் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து நீலத்தடி நீரை திருடி விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கிறது. குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இது குறித்து வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார், கலெக்டர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலத்தடி நீர் கொள்ளை தொடர்ந்தால் மாம்பாக்கம் ஊராட்சி பாலைவனமாக மாறிவிடும். அதற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுபோல் பண்ருட்சி ஊராட்சியில் 10 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    Next Story
    ×