search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை நகருக்கு போரூர் ஏரியில் இருந்து 15-ந் தேதி முதல் தண்ணீர் சப்ளை
    X

    சென்னை நகருக்கு போரூர் ஏரியில் இருந்து 15-ந் தேதி முதல் தண்ணீர் சப்ளை

    சென்னை நகருக்கு வருகிற 15-ந் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட போரூர் ஏரி நீரை சென்னை குடிநீருக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    போரூர்:

    பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு உள்ளன.

    4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 93 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4310 மில்லியன் கனஅடி இருந்தது.

    ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு தினமும் 8 ஆயிரத்து 510 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வீராணத்தில் இருந்து குழாய்கள் மூலம் நெய்வேலி நிலக்கரி சுரங்க தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இது தவிர கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும், மாங்காடு அருகே உள்ள 22 கல்குவாரியில் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது எனினும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க முடியவில்லை.

    இதையடுத்து போரூர் ஏரி தண்ணீரை சென்னை குடிநீருக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் எடுத்துள்ளது.



    இதற்காக போரூர் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வீராணம் ஏரி குழாயுடன் இணைக்கப்படுகின்றன. இந்த குழாய் இணைப்பு பணிகள் இன்னும் 10 நாளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட போரூர் ஏரி நீரை சென்னை குடிநீருக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு போரூர் ஏரி நீரை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×