என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல்: பெண்கள் உள்பட 6 பேர் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல்: பெண்கள் உள்பட 6 பேர் கைது

    சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று இரவு 10.45 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த மன்சூர் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்தது தெரிய வந்தது.

    அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது எதுவும் சிக்காததால் மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.

    மன்சூருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மாத்திரைகள் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அவருக்கு ‘இனிமா’ கொடுத்து மாத்திரைகளை வெளியேற்றினர். அதில் 38 மாத்திரைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்த போது தங்க பவுடர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தங்க கட்டிகளை பொடியாக்கி மாத்திரைகளில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. மன்சூரிடமிருந்து 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய கடலூரைச் சேர்ந்த முகமது என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடையில் 5 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிமிடருந்து 470 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இன்று காலை அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முகைதீன், லட்சுமி, பானு ஆகியோர் நிறைய நகைகளை அணிந்து வந்தனர்.

    இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் சென்னையில் இருந்து செல்லும்போது நகைகள் எதுவும் அணிந்து செல்லவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடந்த சோதனையில் 2 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×