என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பம்மல் நந்தனார் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (42). ஜவுளி வியாபாரி. இவர் கடந்த 12-ந்தேதி தனது தாயார் சரசுவதி, மனைவி தீபா, மகன் ரோசன், மகள் மீனாட்சி ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர்பிழைத்தார்.
இதற்கிடையே உடல்நிலை தேறிய நிலையில் நேற்று அவர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டு நீதிபதி வடிவேலுவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக தாய், மனைவி, மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றதாக அதில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சங்கர்நகர் போலீசில் தாமோதரனின் மாமனார் பாலகிருஷ்ணன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தாமோதரன் மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது உடல்நிலை தேறியுள்ளதை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன், நெசவுத்தொழிலாளி. இவரது மகள் சரிகா (14) 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட சரிகாவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் சேர்த்து இருந்தனர். கடந்த 10-ந் தேதி உடல் நிலை மோசம் அடைந்தது.
இதையடுத்து சரிகாவை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்சு வரவில்லை.
கலெக்டர் பொன்னையாவின் நடவடிக்கையை அடுத்த நீண்ட நேரத்துக்கு பின்னர் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. ஆனால் போகும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக இறந்தார்.
ஆம்புலன்சு தாமதத்தால் மாணவி உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சென்னை மருத்துவம் மற்றும் ஊரகநலத்துறை இயக்குநர் எம்.ஆர். இன்பசேகரன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.
ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், பணியிலிருந்த டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சரிகாவின் தந்தை ஆனந்தன் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்தார்.
எனது மகள் சரிகா காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாள். கடந்த டிசம்பர் 10-ந் தேதி பகல் 12 மணி அளவில் அப்போது பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்ஸ்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்தனர்.
ஆனால் 108 ஆம்புலன்சுக்கு போன்செய்தும் வரவில்லை. கலெக்டருக்கு தகவல் கொடுத்த பின்னர் தான் ஆம்புலன்சு வந்தது. இதனால் 7 மணி நேரம் தாமதமானது.
மகள் சரிகாவை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டார். 10 நிமிடம் முன்பாக வந்து இருக்கலாமே என்று அங்குள்ள டாக்டர்கள் கூறினார்கள்.
எனவே எனது மகள் இறப்பிற்கு காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10.12.2017 அன்று பகல் 12 மணி முதல் 7 மணிவரை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரிவு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர்களின் அலட்சிய போக்கே காரணமாகும். மகள் இறப்பிற்கு காரணமான மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம்:
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கத்தில் நிலம் வாங்கி இருந்தார்.
இதனை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதிக்க கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வினிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார்.
இதற்கு ரூ. 1¼ லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின் கூறினார். அவருக்கு உடந்தையாக மேலாளர் மோகனும் செயல்பட்டார்.
ஆனால் லஞ்சம்கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 1¼ லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர்.
அதனை அவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த செல்வின் மற்றும் மேலாளர் மோகனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சிவபாதகன் மற்றும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் சர்தாரின் காஞ்சீபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
தற்போது மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலவலர், மேலாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத் தில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளில் வேட்டை தொடர்ந்து உள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர வேண்டும் என்று மேடை நடன கலைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடன கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் போல் வேடமிட்டு ஊர்வலமாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் வசித்து வருகிறோம். நடன நிகழ்ச்சியை மட்டும் நம்பி வாழ்ந்து வருகிறோம்.
மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் காவல் துறையினர் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி தருவதில்லை. வெளி மாநில பெண்களை அழைத்து வந்து ஆபாச நிகழ்ச்சிகள் நடத்துவதால் முறையாக நடனம் நடத்தி வரும் நாங்கள் பாதிப்பு அடைகிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் வேடங்களில் நடன கலைஞர்கள் மனு அளிக்க வந்ததால் பொதுமக்கள் அவர்களை வேடிக்கை பார்க்க திரண்ட னர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் மூத்த தலைவர் ஞானதேசிகன், இளைஞரணி பொதுச் செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியின் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுத்த வேண்டும்.
மோடி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கன்னியாகுமரிக்கு வந்து இருக்கலாம். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை துரிதமாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தலை தள்ளிவைப்பது என்ற பேச்சு சரியானது அல்ல. அங்கு பணப்பட்டுவாடாவை முழுவதும் தடுக்க வேண்டும். மத்திய அரசும், தேர்தல் ஆனையமும் முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நியாயமாக நடத்த வேண்டும். மந்திரிகளில் இருந்து மருத்துவர் வரை மாற்றி, மாற்றி பேசுகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும்.
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பலபேர் மாயமாகி உள்ளனர். சிலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் மோடி வரவேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் தேர்தல்தான் முக்கியம் என்று இருந்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் மீனவர்களை சந்தித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தான் பிரதமர் என்பதை மறந்து குஜராத்திலேயே முகாமிட்டு 32 கூட்டங்களில் பேசி பிரசாரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் அவரை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் ராகுல்காந்தி தனியாக நின்று பிரசாரம் செய்து காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளனர்.
புதுவை அமைச்சர்கள் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் முதல் வகுப்புகளில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறுகிறார். இது அவரது வேலையில்லை. புதுவையில் வருமானத்தை பெருக்குவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர் விமானத்தில் செல்கிறாரே. அவரை யார் கேட்பது?

புதுவை கவர்னர் அலுவலகத்தில் 22 பேர் தான் வேலை செய்ய வேண்டும். ஆனால் 64 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமா? மற்றவர்களை குறை சொல்லும் முன்பு அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கவர்னர் ஆய்வு பணியில் ஈடுபடுகிறார். கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும் என எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது.
ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பா.ஜனதா புறவாசல் வழியாக கவர்னரை நியமித்து மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுகிறது. ஒரு கவர்னர் தன்னிச்சையாக உத்தரவு போடக்கூடாது. ஆய்வு செய்யக்கூடாது. கையெழுத்து மட்டுமே போட வேண்டும். இது ஜனநாயக படுகொலை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமங்கலம் பாடிகுப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவன் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு, நகை பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.
அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அமைந்தகரை மார்க்கெட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்று அதிகாலை 1 மணி அளவில் அமைந்தகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது இருளில் பதுங்கி இருந்த மணிகண்டனை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பிடிக்க முயன்றார். உடனே அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனின் வலது கை, தோளில் குத்தினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அவர் அலறி துடித்தார்.
இதனை பயன்படுத்தி மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். உஷாரான உடன் வந்த போலீசார் அவனை விரட்டி பிடித்தனர். உடனே மணிகண்டன் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனையும், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசனையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மணிகண்டனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராஜஸ்தானில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவற்குள் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டரை கொள்ளையன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 145 ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் இது வரை 11 ஆயிரம் விண்ணப்பங்களை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றுள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பெற வருகிற 21-ந்தேதி கடைசி நாள். பிறகு நேர்முகதேர்வு மூலம் விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த மானாம்பதி ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரித்தீஷ் (வயது 6). ராஜா குடும்பத்துடன் நேற்று சிறுதாவூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று இருந்தார்.
அங்கு வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஷ் திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் சிறுவன் ரித்தீஷ் பிணமாக மிதந்தான். விளையாடிய போது குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்துள்ளான்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அணுமின் நிலைய ஊழியர் ஒருவரின் 11 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாலை பள்ளி முடிந்ததும் இந்தி ஆசிரியர் சங்கரராவ் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். பின்னர் குறிப்பிட்ட மாணவியை மட்டும் வீட்டு பாடங்களை முடித்து செல்லுமாறு கூறிவிட்டு மற்ற மாணவிகளை அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் தனியாக இருந்த மாணவிக்கு ஆசிரியர் சங்கரராவ் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது குறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சங்கரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






