என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவாரூர் தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.
கலைஞருக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. தற்போது சுய சிந்தனையோடு செயல்படவில்லை. உடல்நலம் குன்றி இருந்த கலைஞரை சோனியா காந்தி சந்திக்க வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார்.
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாரபட்சமாக நடந்து வருகிறார். கேரளாவில் தேவாலயம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் அறிவின்மையமாக பேசுகின்றனர்.
தற்போது ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அறநிலையத்துறையில் ஊழல் மலிந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அந்த துறையால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்துக்கு வராது.
மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க.-காங்கிரஸ். தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். ஆனால் தமிழகத்தை பாதுகாப்பது மத்திய அரசுதான். மக்களுக்கு இது தெரியும்.
மின்சாரத்தை பூமிக்கடியில் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #SC #SterlitePlant
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (8-ந் தேதி), நாளையும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோரும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி போன்ற வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்த வங்கிகளில் பணிபுரியும் 650 ஊழியர்களும் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தம் பற்றி தெரியாத பலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று மட்டும் ரூ. 300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
நாளையும் போராட்டம் நடப்பதால் மேலும் ரூ. 300 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 600 தபால் ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டு வாடா சேவைகள் முடங்கின. ரூ. 100 கோடிக்கு பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.
ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தொலை தொடர்பு அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவையும் இன்று செயல்படவில்லை.
இந்த அலுவலகங்கள் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தம் என்று மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்களின் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல ஈரோடு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருந்தன.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.
தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
பு.புளியம்பட்டி:
சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளி பஸ் புஞ்சைபுளியம் பட்டிக்கு வந்தது. அங்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சில் 45 மாணவிகள் இருந்தனர். பஸ்சை சத்திய மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார்.
புங்கம்பள்ளி தனியார் மில் அருகே வந்தபோது பஸ்சின் பின் பக்கத்தின் வலது ஓரத்தில் அந்த வழியாக வந்த லாரி மோதியது.
இதில் பஸ்சின் ஜன்னலுக்கு மேல் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தன. இந்த விபத்தில் பஸ்சின் பின் பக்கத்தில் இருந்த சுருதி (வயது 11), யஷ்வந்திகா, அவந்திஸ்ரீ, சம்ரிகா உள்பட 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சுருதியின் கன்னத்தில் உடைந்த கண்ணாடியால் காயம் ஏற்பட்டது.
எனவே அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது கரும்பு தான். கரும்பு, மஞ்சள், அரிசி போன்ற பொருட்கள் வைத்து பொங்கல் படி கொடுப்பது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம். அந்த பழக்கம் இன்றளவும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பாகவே, திருமணமான பெண்களுக்கு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பொங்கல் படி வழங்குவார்கள். அதுவும் தலைப்பொங்கல் என்றால் ஏராளமான சீர்வரிசைகள் கொடுக்கப்படும். பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தற்போது பலர் பொங்கல் படி கொடுத்து வருகிறார்கள்.
ஈரோட்டை அடுத்த பி.பி.அக்ரஹாரம் அருகே உள்ள சமயசங்கிலியில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை கரும்புகள் விளையும். 400 கரும்புகள் தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகை அன்று இந்த விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. சமயசங்கிலி பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் தற்போது குஜராத் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கரும்புகள் அங்கு சென்றுசேர 5 முதல் 6 நாட்கள் வரை ஆகும். அடுத்த வாரத்தில் இருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு கரும்புகள் வெட்டி அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அப்படி எந்த பெண்ணின் உடலும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி மாரியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் பெண்ணின் உடலை கண்ட பொதுமக்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண்ணின் உடல் ஆற்றில் மிதந்ததை கண்டனர். அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது. காலில் கொலுசு அணிந்திருந்தார்.
எனவே அந்த பெண் திருமணமானவர் என்றும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருக்க கூடும் எனவும் தெரிகிறது. ஆனால் உடல் தண்ணீரில் மூழ்கி உப்பி போய் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.
அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி பலியானாரா? அந்த பெண்ணை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்டிகை என்றாலே தற்போது மது அருந்திவிட்டு கொண்டாட வேண்டும் என்ற நிலையாகிவிட்டது குறிப்பாக ஒரு சிலர் இளைஞர்கள் எந்த ஒரு பண்டிகை என்றாலும் மது அருந்துவதை கெளரவமாகக் கருதுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தீபாவளி பொங்கல் பண்டிகையையொட்டி குடிமகன்கள் மதுபானங்களை விரும்பி அருந்துவார்கள்.
அதன்படி புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள், இளைஞர்கள் குவிந்தனர்.
தங்களுக்கு பிடித்தமான பீர் ரம் ஒயின் போன்றவற்றை வாங்கி அருந்தினார்.
புத்தாண்டில் மட்டும் ரூ.3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து ஈரோடு டாஸ்மாக் மேலாளர் ரங்க நாதன் கூறியதாவது:-
இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் மது பிரியர்களுக்கு தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ரூ 3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ 2.90 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ரூ 50 லட்சம் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் கடைகளில் கொடுக்கப்படுகிறது. பைகளின் தரத்திற்கு ஏற்ப 2 ரூபாய், 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கடை வியாபாரிகள் பைகளை கொடுக்கும் போது ‘‘அடுத்த தடவை வரும் போது தவறாமல் இந்த துணி பையை கொண்டு வாருங்கள்’’ என அறிவுரையும் கூறி வருகிறார்கள்.
இதே போல் இறைச்சி கடை, மீன் கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு வாழை இலை, தேக்கு மர இலை, தைல இலைகளில் கொடுத்து வருகிறார்கள்.
டாஸ்மாக் மதுக்கடைகளில் சரக்கு அடிக்க பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தி வருவார்கள். அதை குடிமகன்கள் பயன்படுத்தி விட்டு தூர எறிந்து விட்டு போவார்கள்.
ஈரோடு நகரில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கிறார்கள். பிராந்தி, ரம் மற்றும் பீர் ஊற்றி குடிக்க இந்த கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த டம்ளர்கள் சொந்தமாக குடிமகன்களுக்கு கொடுப்பது இல்லை.
ஒரு டம்ளருக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதில் ஊற்றி சரக்கு அடித்து விட்டு கண்ணாடி டம்ளர்களை அங்கேயே கொடுத்து விட்டு வர வேண்டும்.
நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சென்றால் 50 ரூபாய் கண்ணாடி டம்ளருக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் குடிமகன்கள் குழம்பி வருகிறார்கள். #Plasticban
தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு பகுதிகளில் 160 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் மாவட்டம் முழுவதும் 350 பிளாஸ்டிக் கடைகள் செயல்படுகின்றன. தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி நேற்று முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.
பிளாஸ்டிக் தடை உத்தரவால் ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜெப்ரீ கூறியதாவது:-
அரசு அறிவித்துள்ள 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் சரியாக அளிக்கவில்லை. இதன் மூலம் சிறு குறு உற்பத்தியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
தற்போது இந்த தடை உத்தரவால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எங்களது வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ. 15 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது.
நமது அண்டை மாநிலங்களில் இன்னும் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இன்னும் அது எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவர் அவர் கூறினார். #PlasticBan
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 928 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 301 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 38 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தாலும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வருகிறோம். விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.
கீழ்பவானி வாய்க்கால் 2-ம் போக பாசனத்திற்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரிடுவதற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிவாரணத்தொகை கொடுக்கிறதோ இல்லையோ தமிழக அரசு 3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
2011ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து அப்போதைய முதல்வர் தலைமையில் ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
அதில் தண்ணீர் பாக்கெட், உணவு பொருள்கள் பயன்பாடு உள்பட 13 பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கேடு ஏற்படுகிறது.
சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அடைத்து நோய் கிருமி உருவாக காரணமாகின்றன. குளங்களில் பிளாஸ்டிக் பொருட்களாகவே தென்படுகின்றன. பல்வேறு ஆய்வுக்கு பின்னரே பிளாஸ்டிக் தடைக்கு முடிவு செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #PlasticBan #KCKaruppannan
ஈரோடு:
ஈரோடு அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் காதர் ஷெரிப் (வயது 52). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு மசூதியில் வாட்ச் மேனாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு கருங்கல்பாளையம் அடுத்த அசோகபுரம் ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு வளைவில் காதர் ஷெரிப் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக காதர் ஷெரிப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர் ஷெரிப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan






