search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடிய காட்சி.
    X
    ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடிய காட்சி.

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (8-ந் தேதி), நாளையும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோரும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி போன்ற வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இந்த வங்கிகளில் பணிபுரியும் 650 ஊழியர்களும் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    வேலை நிறுத்தம் பற்றி தெரியாத பலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று மட்டும் ரூ. 300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    நாளையும் போராட்டம் நடப்பதால் மேலும் ரூ. 300 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 600 தபால் ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டு வாடா சேவைகள் முடங்கின. ரூ. 100 கோடிக்கு பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

    ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தொலை தொடர்பு அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவையும் இன்று செயல்படவில்லை.

    இந்த அலுவலகங்கள் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தம் என்று மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்களின் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருந்தன.
    Next Story
    ×