என் மலர்
செய்திகள்

பவானி ஆற்றில் மிதந்த இளம்பெண் பிணம்- போலீசார் தீவிர விசாரணை
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அப்படி எந்த பெண்ணின் உடலும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி மாரியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் பெண்ணின் உடலை கண்ட பொதுமக்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண்ணின் உடல் ஆற்றில் மிதந்ததை கண்டனர். அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது. காலில் கொலுசு அணிந்திருந்தார்.
எனவே அந்த பெண் திருமணமானவர் என்றும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருக்க கூடும் எனவும் தெரிகிறது. ஆனால் உடல் தண்ணீரில் மூழ்கி உப்பி போய் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.
அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி பலியானாரா? அந்த பெண்ணை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.